காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடுவானில் ஏர் இந்தியா விமானமும், நேபாள் ஏர்லைன்ஸ் விமானமும் மோதும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தவறிழைத்த 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை காத்மாண்டு விமான நிலையத்துக்கு கோலாலம்பூரிலிருந்து ஏர்பஸ் ஏ-320 ரக விமானம் வந்து கொண்டிருந்தது. அதேநேரத்தில் டெல்லியிலிருந்து காத்மாண்டுக்கு ஏர் இந்தியா விமானமும் வந்துகொண்டிருந்தது.
ஏர் இந்தியா விமானம் 19 ஆயிரம் அடி உயரத்திலிருந்து தரையிறங்கிக் கொண்டிருந்தது. அதேபோல் நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் 15 ஆயிரம் அடி உயரத்திலிருந்து அதே பகுதியில் தரையிறங்கிக் கொண்டிருந்தது. அப்போது இந்த விவரம் ரேடாரில் தெரியவந்ததும், நேபாள் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கிய பைலட்டுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு விமானத்தின் உயரம் 7,000 அடியாகக் குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2 விமானங்களும் பத்திரமாகத் தரையிறங்கின.
இதனால் வானில் 2 விமானங்களும் மோதிக் கொள்ளும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
2 விமானங்கள் ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் தரையிறங்குவதை கவனிக்காமல் பணியில் அலட்சியாக இருந்ததாக 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக நேபாளத்தின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணைய (சிஏஏஎன்) செய்தித் தொடர்பாளர் ஜெகன்னாத் நிரூலா தெரிவித்தார்.மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து: கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் (சிஐஏஎல்) வளாகத்திலிருந்து நேற்று பகல் 12 மணிக்கு வழக்கமான பயிற்சியில் கடலோரப் பாதுகாப்புப் படையின் ஏஎல்எச் ரக ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தது.
தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த விமானி ஒருவர் காயமடைந்தார். இதனால் கொச்சி விமான நிலையத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் நொறுங்கிய ஹெலிகாப்டரின் பாகங்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.