பீதர்: கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் ஹைதராபாத் விடுதலைக்காக பாடுபட்டவர்களை காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.
நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் மறைந்த சர்தார் வல்லபபாய் பட்டேல் மற்றும் கோராட்டா தியாகிகள் நினைவிடத்தை பீதர் மாவட்டத்தின் கோராட்டா கிராமத்தில் நேற்று திறந்த வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
மே 9, 1948 அன்று கோராட்டாவில் 200 பேரை ஹைதராபாத் நிஜாம் கொன்று குவித்தது தென்னிந்தியாவின் ஜாலியன் வாலாபாக் நிகழ்வாக கருதப்படுகிறது. 2.5 அடி மூவர்ணக் கொடியை ஏற்றியதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் தற்போது 103 அடி தேசிய கொடி இங்கு ஏற்றப்பட்டுள்ளது. இதனை யாராலும் தொடமுடியாது என்பதை பெருமையுடன் பறைசாற்றிக் கொள்ளலாம்.
வாக்கு வங்கி அரசியலுக்காக ஒருசாராரை திருப்திபடுத்தும் கொள்கையால் ஹைதராபாத் விடுதலைக்காக போராடி உயிர்தியாகம் செய்வதர்களை காங்கிரஸ் ஒருபோதும் நினைவுகூரவில்லை.
ஹைதராபாத் நிஜாம் இப்பகுதியை ஆண்டதால், அது ஹைதராபாத்-கர்நாடகா பகுதி என்று அழைக்கப்பட்டது. இந்தியாவின் அடிமைத்தனத்தின் சின்னங்களை இங்கு தொடர அனுமதித்தது காங்கிரஸ் தான். ஆனால் எடியூரப்பா அதற்கு கல்யாண கர்நாடகா என்று பெயர் சூட்டினார்.
சர்தார் படேல் இல்லையென்றால் ஹைதராபாத் விடுதலை பெற்றிருக்காது. அதன்நினைவாக படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது.
அதேபோன்று, தெலங்கானா அரசு ஹைதராபாத் விடுதலை தினத்தை (செப்டம்பர் 17) கொண்டாட தயங்குகிறது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அந்த நாளை விமரிசையுடன் கொண்டாடி வருகிறது.
கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரூ.50 கோடி செலவில் கோராட் டாவில் பிரம்மாண்ட தியாகிகள் நினைவிடம் அமையவேண்டும் எனில் பாஜக மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
இந்நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.