சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை வசந்தம் நகர் பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ‘நரேன் பயர் ஒர்க்ஸ்’ தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் நரேன்(எ) நரேந்திரன், அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்த பட்டாசு ஆலையில் காஞ்சிபுரம் மற்றும் குருவிமலை சுற்றியுள்ள வளத்தோட்டம் கிராமங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் வழக்கம்போல் பட்டாசுகள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை ஊழியர்கள் வெளியில் காயவைத்தனர்.. அப்போது, மூலப்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வு ஏற்பட்டு தீப் பிடித்து பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 17 பேர் கை, கால்கள் இழந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் உயிருக்கு போராடி வருகின்றனர். காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பூபதி(57), சுதர்சன்(31), வளத்தோட்டம் பகுதியை சேர்ந்த வித்யா(30), பள்ளூர் பகுதியை சேர்ந்த முருகன்(40), குருவிமலை பகுதியை சேர்ந்த தேவி(32), சசிகலா(38), கங்காதரன்(35) 2 தொழிலளர்கள் உடல் முழுவதும் சிதைந்துள்ளதால் அடையானம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன்(50), ஜெகதீசன்(35) ஆகியோர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் இன்று காலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ரவி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.