‘வாத்தி’ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார், மேலும் படத்தில் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், சிவராஜ்குமார் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு பீரியட் படம் தான் ‘கேப்டன் மில்லர்‘ படம். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தென்காசி அருகே உள்ள வனப்பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கியமான போர் காட்சிகளை வீடியோகிராபர் ஒருவர் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
படத்தின் முக்கியமான போர் காட்சிகள் இணையத்தில் வெளியானதை கண்டு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக படத்தின் தயாரிப்புக்குழு இணையத்தில் பரவ தொடங்கிய இந்த காட்சிகளை நீக்க ஏற்பாடு செய்தது. ஏற்கனவே இதுபோன்று பல முன்னணி நடிகர்களின் படக்காட்சிகள் இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. காட்சிகள் இணையத்தில் கசிந்ததை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு இருக்கின்றது, படப்பிடிப்பு தளத்திற்குள் செல்போன், வீடியோ கேமராக்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
‘கேப்டன் மில்லர்‘ படத்தின் போர் காட்சிகள் இணையத்தில் கசிந்தது ஒருபுறம் கவலையளிப்பதாக இருந்தாலும், மறுபுறம் இயக்குனர் அருண் மாதேஸ்வரனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதாவது இந்த போர் காட்சிகள் உண்மையானது என்றும் இயக்குனர் கிராபிக்ஸ் எதையும் பயன்படுத்தாமல் திறமையாக எடுத்திருக்கிறார் என்றும் இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். கேப்டன் மில்லர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி தான் இந்த போர் காட்சி என்றும், கூடிய விரைவில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டு படம் வெளியீட்டுக்கு தயாராகும் என்று செய்திகள் தெரிவிக்கிறது.