நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்த வண்ணம் இருக்கிறது. ராஜஸ்தானில் மான்களை வேட்டையாடியதால் டெல்லி மற்றும் பஞ்சாப்பில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் லாரன்ஸ் பிஸ்னோய், நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, கொலை செய்ய ஆட்களையும் மும்பைக்கு அனுப்பி வைத்தான். இது தொடர்பாக ஏற்கனவே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் கனடாவில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டாளி கோல்டி பிரர் என்ற கிரிமினலும் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தான். இதனால் சல்மான் கானுக்கு தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளியில் செல்வதாக இருந்தால் குண்டு துளைக்காத காரையே பயன்படுத்துகின்றார்.
மும்பையில் சல்மான் கான் வீட்டிற்கு வெளியில் ரசிகர்கள் கூடுவதற்கு கூட போலீஸார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். சல்மான் கானுக்கு வந்திருந்த இமெயில் மிரட்டலில் பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலாவிற்கு ஏற்பட்ட முடிவுதான் ஏற்படும் என்றும், கோல்டி பிரர் பிரச்னையை தீர்த்துக்கொள்ள உங்களுடன் நேருக்கு நேர் பேச விரும்புகிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து கோல்டி பிரர் மற்றும் லாரன்ஸ் பிஸ்னோய் ஆகியோர் மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அதேசமயம் அந்த மெயில் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரித்ததில் ராஜஸ்தானில் இருந்து வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அனுப்பிய நபர் குறித்த விபரங்களும் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் விரைந்து சென்றனர். ராஜஸ்தான் போலீஸாரின் துணையோடு அந்த நபரை கைது செய்தனர். அவரின் பெயர் தகத் ராம் பிஸ்னோய்(21) என்று தெரிய வந்துள்ளது. ஜோத்பூர் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ஆயுத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட, தகத் ராம் பிஸ்னோய் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருந்தார். அவரை போலீஸார் மும்பைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் உண்மையில் அவருக்கு கோல்டி பிரருடன் தொடர்பு இருக்கிறதா அல்லது கொலை மிரட்டல் விடுக்க அவரது பெயரை பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.