சென்னை: தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவோம் என துபாயில் மார்ச் 18 முதல் 20-ம் தேதி வரை நடந்த 9-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் சர்வதேச பொருளாதார உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டை அமைச்சர் துரை முருகன் தொடங்கி வைத்தார். விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
மாநாட்டின் நிறுவனத் தலைவர் பி.ஆர்.எஸ்.சம்பத் மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கினார். அபித் ஜுனைத் வரவேற்றார். கயானா முன்னாள் பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மொரீசியஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்.மேலும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிரி எம்.சரவணன், தமிழக எம்பிக்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி, புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் விஜிபி சந்தோசம் உள்ளிட்ட ஏராளமானோர் கருத்துரை வழங்கினர்.
மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி நிறைவுரையாற்றினார். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் பல்வேறு துறைகளில் தமிழர்கள் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாநாடு நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர் கள் தெரிவித்தனர். இம்மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும் தமிழக அமைச்சர் துரைமுருகன், மலேசியா பினாங்கு முதல்வர் ராமசாமி, மலேசியா எம்பி டத்தோ சிரி சரவணன், லைக்கா குழும தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா, அபுதாபி இந்திய கலாச்சார சமூக மையத் தலைவர் நடராஜன், புளோரிடா சர்வேச பல் கலைக்கழக பேராசிரியர் கலைமதி, டர்பன் ஆர்ஆர் குழும தலைவர் இசைவாணி ரெட்டி, கேபிஎம்ஜி தலைமை தணிக்கையாளர் கோபால் பாலசுப்பிரமணியம், பிளாக் குழும நிறுவனர் முகமது கனி முகமுது இயியா ஆகியோருக்கு உலகத் தமிழர் மாமணி விருது வழங்கப்பட்டது.
மேலும் தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மேம்பாட்டுக்கு இந்த மாநாடு உறுதுணையாக இருக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உலகம் முழுவதும் 100 நகரங்களில் உலகத்தமிழர் பொருளாதார மையத்தை உருவாக்க தமிழக அரசு உதவ வேண்டும், பினாங்கு மற்றும் டர்பன் நகரில்இருந்து சென்னைக்கு நேரடிவிமான சேவை தொடங்க வேண்டும், அயலக தமிழர் நலவாரியத்துக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.