சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நாளை (28) நடைபெறவுள்ளது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நியூஸிலாந்தின் ஒக்லாந்து நகரின் ஈடன் பார்க் மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 274 ஓட்டங்களை பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பில், பின் அலன் 51 (49) ஓட்டங்களையும், ரச்சின் ரவிந்திர 49 (52) ஓட்டங்களையும், டெரில் மிச்சல் 47 (58) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன 4 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு 275 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இதனால் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆகக் கூடுதலாக 18 ஓட்டங்களையும், சாமிக்க கருணாரத்ன 11 ஓட்டங்களையும், லஹிரு குமார 10 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில் ஹென்றி ஷிப்லெ 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெரில் மிச்சல் மற்றும் ப்ளயர் ரிக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் நாளை (28) கிறிஸ்ட்சர்ச்சில் காலை 6.30 மணிக்கு இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.