டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டப் பேரவையில் எதிர்கட்சித் தலைவர்
கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
டிஎன்பிஎஸ்சி சார்பாக அரசுத்துறையில் 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. இந்த போட்டித் தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதே போல் ஒரே பயிற்சி நிறுவனத்தில் பயின்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. அரசியல் கட்சியினரும் இது தொடர்பாக விசாரிக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின்னர் நேரமில்லா நேரத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் போட்டி தேர்வு எழுதிய, அடுத்தடுத்த பதிவெண் கொண்ட 700க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர்.
அதே போல் தென்காசியில் ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற சுமார் 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முறைகேடு நடந்துள்ளது என்று எடப்பாடி ப்ழனிசாமி கூறினார்.
மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ நாகை மாலி, தவாக தலைவர் வேல்முருகன் ஆகியோரும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “இந்த முறைகேட்டுப் புகார் தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத் துறைச் செயலாளாரை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விரிவான விளக்கம் கேட்க உத்தரவிட்டுள்ளேன். கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் இது போன்ற புகார்கள் வந்துள்ளதா, அதற்கும் இதற்கும் என்னென்ன ஒற்றுமை வேற்றுமை இருக்கின்றன என்பது குறித்தும் கேட்கப்பட்டுள்ளது. அந்த விளக்கம் வந்ததும் தருகிறேன்” என்று கூறினார்.