திருவில்லிபுத்தூர்: தமிழ்நாடு வனத்துறைக்காக முதன்முதலாக வாங்கப்பட்ட மோப்பநாய் சிமி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. தமிழ்நாடு வனத்துறைக்காக ‘சிமி’ என்ற பெண் மோப்பநாய் முதன்முதலாக வாங்கப்பட்டு விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வனத்துறையில் சேர்க்கப்பட்டது. மத்திய பிரதேசம் போபாலில் 2014ம் ஆண்டு பிறந்த சிமி ஒரு வருட பயிற்சிக்கு பின்னர் வனத்துறையில் பணியாற்றி வந்தது. தேனி மாவட்டம் சுருளி பகுதியில் உள்ள காப்பு காட்டு பகுதியில் யானை ஒன்று இறந்த வழக்கில் முக்கிய பணியாற்றியது. அதேபோல் சாப்டூர் பகுதியில் சிறுத்தை இறந்தது தொடர்பாகவும் முக்கியமாக பணியாற்றியது.
வயது முதிர்வு காரணமாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்படாமல் இருந்து சிமிக்கு திருநெல்வேலி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 10ம் தேதி, 9 வயதான சிமி விரைவில் பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக வனத்துறையினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை சிமி உயிரிழந்தது.
சிமியின் உடல் வனத்துறை வளாகத்திலேயே உரிய மரியாதை செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.