டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து சட்டமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று விளக்கம் அளித்தார். அதில், இதுதொடர்பான தகவல்கள் என் கவனத்திற்கு வந்த உடன், டி.என்.பி.எஸ்.சி அலுவலர்களிடம் பதில் பெறுமாறு மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தேன்.
டி.என்.பி.எஸ்.சி
டி.என்.பி.எஸ்.சி அமைப்பு தன்னிச்சையாக செயல்படக் கூடியது. குரூப் 4 தேர்வு தொடர்பான பொதுவெளியில் வந்த தகவலுக்கும், என்னிடம் இருந்து வந்த தகவலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. டி.என்.பி.எஸ்.சியில் தேர்வு மைய எண்ணை வைத்து தான் எந்த சென்டரில் எத்தனை பேர் எழுதினார்கள் என்று சொல்ல முடியும். அப்படி பார்த்தால் தென்காசி மாவட்டத்திலேயே மொத்தம் 8 சென்டர்கள் தான் இருந்துள்ளன.
தென்காசி தேர்வு மையம்
இவற்றில் முதல் 500 பேரில் 27 பேர், முதல் 1,000 பேரில் 45 பேர், முதல் 10 ஆயிரம் பேரில் 397 பேர். இதுதான் தென்காசி மாவட்ட மையங்களில் இருந்து வந்த எண்ணிக்கை. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் விளம்பரம் செய்யும் விஷயத்தில், அவர்கள் எங்கெல்லாம் கிளைகள் வைத்திருக்கிறார்கள் என்ற விவரங்கள் என்னிடம் கிடையாது. குரூப் 4ல் ஜூனியர் அசிஸ்டென்ட், டைப்பிஸ்ட் என தனித்தனி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இரண்டு விதமான தேர்வுகள்
இந்த தேர்வுகளை எழுதியவர்கள் இரண்டிலும் வெவ்வேறு பிரையாரிட்டி பட்டியலில் வந்துள்ளனர். சிலர் கூறுவது என்னவென்றால் ஜூனியர் அசிஸ்டென்ட்டில் முன்னிலையில் வந்தேன். ஆனால் டைப்பிஸ்ட்டில் என்னுடைய ரேங்க் குறைந்துவிட்டது என்கின்றனர். ஏனெனில் ஜூனியர் அசிஸ்டென்ட் தேர்வில் எந்தவித டெக்னிக்கல் அறிவும் தேவையில்லை. ஆனால் டைப்பிஸ்டில் வெவ்வேறு சிறப்பு படிநிலைகள் இருக்கின்றன.
தரவரிசை பட்டியல்
இதன் காரணமாக தர வரிசையில் வெவ்வேறு விதமாக வருவது சாத்தியம் தான். சர்வேயர் தேர்வை பொறுத்தவரை சுமார் ஆயிரம் இடங்களுக்கு 29,575 பேர் எழுதினர். அதில் காரைக்குடியில் ஒரு தேர்வு மையத்தில் எழுதியவர்களில் முதல் 500 பேரில் 200 பேரும், முதல் 1,000 பேரில் 377 பேரும், முதல் 2,000 பேரில் 615 பேரும் அடங்குவர்.
விரிவான அறிக்கை
கடந்த 5, 7 ஆண்டுகளில் இதேபோல் ஏதேனும் ஒரு மையத்தில் அதிகம் தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கிறார்களா? அது இதே காரைக்குடி மையத்திலா? இல்லை வேறு ஏதேனும் மையத்திலா? இதேபோல் மற்ற தேர்வுகளிலும் கடந்த முறைக்கும், தற்போது எழுதப்பட்டதற்கும் ஏதேனும் ஒற்றுமை அல்லது வேற்றுமை உள்ளதா? போன்ற விவரங்களை கேட்டுள்ளேன்.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் செயலாளர் விரிவான அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தி இருக்கிறேன். இந்த துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என ஏற்கனவே கூறியிருக்கிறேன். இதுதொடர்பான நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.