சண்டிகர்: பஞ்சாப் போலீஸார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொது அமைதியை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 353 பேரில் இதுவரை 197 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 40 பேர் கிரிமினல் குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (என்எஸ்ஏ) 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நிரபராதிகள் யாரும் துன்புறுத்தப்படுவதையோ அல்லது கைது செய்யப்படவில்லை என்பதையோ உறுதிசெய்ய வேண்டும் என மாநிலத்தின் அனைத்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை ஆணையர்களுக்கு காவல்துறை இயக்குநர் (டிஜிபி) கவுரவ் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இவ்வாறு பஞ்சாப் போலீஸார் தெரிவித்தனர்.
‘‘எந்தவொரு தடுப்புக் காவல் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு முன் புலனாய்வு அதிகாரிகளிடம் கிடைக்கக்கூடிய முதல்கட்ட ஆதாரங்கள் திருப்திப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். மாநிலத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து பேணுமாறும், போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு பொதுமக்கள் செவிசாய்க்க வேண்டாம்’’ என்று டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.