டெல்லி: ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை வழக்கம்போல் 11 மணிக்கு தொடங்கின. இரு அவைகளிலும் எதிர்க்கட்சி சார்ந்த எம்.பி.க்கள், ராகுல் காந்தி தகுதி நீக்கம்தொடர்பாக தங்களது கருத்துக்களை பேசவேண்டும். மேலும், அவையை ஒத்திவைத்து விட்டு இது குறித்து விவாதிக்க வேண்டும். நாடாளுமன்ற மக்களவையில் இருந்து ராகுல் காந்தி அரசியல் கால்புணர்ச்சி காரணமாக நீக்கப்பட்டுள்ளார் என பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் நாடாளுமன்றத்தின் மக்களவையில் இது குறித்து காங்கிரஸ் கட்சி, திமுக, வி.சி.க. உள்ளிட்ட ஏராளமான எதிர்கட்சி எம்.பி.கள் ஒத்திவைப்பு தீர்மானம் வழங்கியிருந்தது. ஆனால், அவை தொடங்கிய உடனே எதிர்க்கட்சி எம்.பி.கள் மக்களவையில் எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ததை கண்டித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளும்கட்சி பாஜக எம்.பி.கள் எதிர்த்து குரல் எழுப்பினார்கள். இரு தரப்பினருமே ஒரே நேரத்தில் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதே நிலைதான் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நீடித்தது. ராகுல் காந்தி தகுதி நீக்கம், ராகுலின் லண்டன் பேச்சு மற்றும் அதானி குழும விவகாரத்தால் அமளி ஏற்பட்டது. இதனால் அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார். கடந்த 13-ம் தேதி தொடங்கிய நாடாளுன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது அமர்வு இதுவரை ஒரு நாள் கூட சரியாக, முழுமையாக இயங்கவில்லை. தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்கட்சியின் முழக்கத்தால் இரு அவைகளும் ஒத்துவைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2 தினங்கள் விடுமுறைக்கு பிறகு இன்றைய தினம் நாடாளுமன்றதின் இரு அவைகளும் துவங்கிய 20 வினாடிகளிலேயே தொடர் அமளியில் காரணமாக இன்றும் முடங்கியுள்ளது.