‘பெலாரஸில் அணு ஆயுதங்களை ரஷ்யா நிலைநிறுத்துமா’ – புதின் பேச்சால் பரபரப்பு

மாஸ்கோ: பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளது உலக நாடுகளிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த நடவடிக்கை அணு ஆயுதப் பரவல் தடைக்கான வாக்குறுதிகளை மீறும் வகையில் இருக்காது என்று புதின் கூறியிருக்கிறார்.

இந்த முடிவின் மூலம் உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவரும் நேட்டோ படைகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கையையும் புதின் வழங்கி இருக்கிறார். இது குறித்து அதிபர் புதின் கூறும்போது, “உக்ரைன் மீதான தாக்குதலுக்காக எங்களது அணு ஆயுதங்களை பெலாரஸில் நிலைநிறுத்தப் போகிறோம். இது புதிது அல்ல. கடந்த பத்து வருடங்களாக இதனை அமெரிக்கா செய்து வருகிறது. அமெரிக்கா தங்களுடைய அணு ஆயுதங்களை தங்கது நட்பு நாடுகளில் நிலை நிறுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்கள் தொடர்பான புதினின் இந்தப் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, “அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துவதற்கான எந்த அறிகுறியும் எங்களுக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளது.

முன்னதாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாட்கள் பயணமாக கடந்த வாரம் ரஷ்யா வந்திருந்தார். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இரு நாட்டு வணிக உறவு குறித்தும் ஆலோசனை நடத்தினர் . இந்த நிலையில், ஆணு ஆயுதங்கள் குறித்து புதின் பேசி இருப்பது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் போரின் பின்னணி: அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இப்போரினால் உக்ரைனில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். ரஷ்யாவுக்கு எதிராக போர்க் குற்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்று உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.