“அதிமுகவில் என்னை போல் ஒரு லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள். இந்த பழனிசாமி இல்லை என்றால் இன்னொருவர் ஆள்வார். ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுகவை எவராலும் தொட்டு பார்க்க முடியாது” என தஞ்சையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
தஞ்சை மகாராஜா திருமண மகாலில் முன்னாள் அமைச்சர் காமராஜ் இளைய மகனுக்கு நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் வாழ்த்துரை வழங்கி பேசும்போது, “டெல்டா மாவட்டங்களில் முக்கிய பிரச்னையாக இருப்பது காவிரி நீர் பிரச்சினை. அதன் 50 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசு. அதன்படி டெல்டா பாசனத்தின் 8 மாவட்ட விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசிடம் பேசி போராடி ‘பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ என அறிவித்தோம்.
மேலும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை ஏற்று 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கியது அம்மா அரசு. ஆனால் திமுக ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்க நேர கட்டுப்பாடு விதித்துள்ளளனர். திமுக அரசு வந்தால் மின் தடையும் வந்துவிடும்.
அதிமுக-வில் 1 லட்சம் பழனிசாமி உள்ளனர். இந்த பழனிசாமி இல்லையென்றால், யாராவது இந்த கட்சியை ஆள்வார். ஒன்றறை கோடி தொண்டர்களை கொண்ட கட்சி இது. அதிமுக, தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி. ஆகவே எவராலும் இதை தொட்டு பார்க்க முடியாது” என பேசினார். விழாவில் த.ம.கா தலைவர் ஜி.கே.வாசன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM