நெல்லையில் தந்தையை கவனிக்காத மகன்கள் கைது: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாத சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவருக்கு முத்துகிருஷ்ணன் முத்து மணிகண்டன் செண்பகநாதன் செந்தில் முருகன் ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர். சுந்தரம் தனியார் பீடி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 

இந்த நிலையில் சுந்தரத்தின் நான்கு மகன்களும் அவரது தந்தையை கவனிக்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுந்தரம் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2007 இன் கீழ் தனது மகன்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்து இருந்தார். இதன் பெயரில் சுந்தரத்தின் மனுவை விசாரித்தார் ஆட்சியர். மேலும் மேற்கண்ட சுந்தரத்தின் மகன்கள் நான்கு பேரும் மாதந்தோறும் 15 ஆம் தேதிக்குள் சுந்தரத்தின் வங்கி கணக்கில் 2500 ரூபாய் ஜீவனாம்சம் செலுத்த உத்தரவிட்டார். 

ஆனால் முத்துகிருஷ்ணன் மற்றும் முத்து மணிகண்டன் ஆகிய இருவரும் மட்டுமே மாதந்தோறும் ஆட்சியர் உத்தரவுப்படி தனது தந்தை சுந்தரத்திற்கு 2500 ரூபாய் ஜீவனாம்சம் கொடுத்து வந்துள்ளனர். மேலும் மீதமுள்ள செந்தில் முருகன் மற்றும் செண்பகநாதன் இருவரும் ஆட்சியர் உத்தரவை மதிக்காமல் ஜீவனாம்ச வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து சுந்தரம் மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்தார் அந்த மனு மீது விசாரண நடத்திய நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தனது உத்தரவை மதிக்காமல் தந்தைக்கு ஜீவனாம்ச வழங்க மறுத்த செந்தில் முருகன் மற்றும் செண்பகநாதன் இருவர் மீதும் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்(2007) கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார், அதன் பெயரில் தற்போது நெல்லை மேலப்பாளையம் காவல் நிலைய போலீசார் தந்தைக்கு ஜீவனாம்சம் வழங்காத செந்தில் முருகன் மற்றும் செண்பகநாதன் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். 

மேலும் மேற்கண்ட சட்டப்படி இருவருக்கும் மூன்று மாதம் சிறைத்தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது சமீபகாலமாக பெற்றோர்களை குழந்தைகள் கவனிக்காததால் வயதான காலத்தில் பலர் சாலையில் ஆதரவு இல்லாமலும் காப்பகங்களிலும் சேர்க்கப்பட்ட நிலை அதிகரித்து வருகிறது, ஆனால் பெரும்பாலானோர் தனது மகன்கள் என்ன கொடுமை செய்தாலும் பெற்ற கடமைக்காக அதை வெளியில் சொல்லாமல் இருப்பதை பார்த்துள்ளோம். இதுபோன்ற சூழ்நிலையில் பெற்றோர்களை கவனிக்காத மகன்களை தண்டிக்கும் சட்டம் இருப்பதை அறிந்து அந்த சட்டத்தின் கீழ் போராடிய நெல்லை சுந்தரத்தின் செயல் மகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.