BCCI Annual Contract: புரொமோஷன் பெற்ற ஜடேஜா, பாண்டியா; கீழே இறக்கப்பட்ட கே.எல்.ராகுல் – முழு விவரம்!

அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரையிலான 2022 – 23 சீசனுக்கான கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் தொடர்பான ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் கிரிக்கெட் வீரர்கள் வழக்கம்போல A+, A, B, C என்று கிரேடு வாரியாக வகைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான சம்பளப் பட்டியல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் A+ கிரேடு பிரிவில் இருப்பவர்களுக்கு ரூ.7 கோடி, A கிரேடுக்கு ரூ.5 கோடி, கிரேடு B க்கு ரூ.3 கோடி மற்றும் கிரேடு C-க்கு ரூ.1 கோடி எனச் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டியா, ஜடேஜா

அதன்படி A+ கிரேடில் இடம்பெற்றுள்ள ரோஹித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் ரவீந்திரா ஜடேஜா ஆகியோர் ரூ.7 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன் 5 கோடி என A கிரேடில் இருந்த ஜடேஜா A+ கிரேடு என ரூ.7 கோடிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

கிரேடு A-வில் ஹர்திக் பாண்டியா, அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட், அக்‌ஸர் பட்டேல் ஆகியோர் ரூ.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கிரேட் C-ல் 1 கோடியில் இருந்த ஹர்திக் பாண்டியா, டபுள் புரொமோஷன் பெற்று A கிரேடு என ரூ.5 கோடிக்கு உயர்ந்துள்ளார். அக்‌ஸர் பட்டேலும் B கிரேடிலிருந்து A கிரேடுக்கு உயர்ந்துள்ளார்.

கிரேடு B பிரிவில் புஜாரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகியோர் ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சூர்யகுமார் C கிரேடிலிருந்து B கிரேடுக்கு மாறி, ரூ.1 கோடியிலிருந்து ரூ.3 கோடி சம்பளத்துக்கு உயர்ந்துள்ளார். கிரேடு A விலிருந்த கே.எல்.ராகுல் B கிரேடுக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரின் சமீபத்திய மோசமான ஆட்டங்கள் இதற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.

கே.எல்.ராகுல்

இவர்கள் தவிர இஷான் கிஷன், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத் ஆகியோர் கிரேட் C பிரிவில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்பட்டியலில் ஏற்கனவே இருந்த ஷிகர் தவான், உமேஷ், யுவேந்திர சலால், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் எந்தவித மாற்றமின்றி நீடிக்கின்றனர். ஆனால் ஷர்துல் தாக்கூர் மட்டும் B-யிலிருந்து C கிரேடுக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவர்களுக்கு ஒரு கோடி சம்பளம் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல புவனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விருத்திமான் சாஹா, தீபக் சஹார் ஆகியோர் சம்பளப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.