தமிழக சட்டபேரவையில் கடந்த 20-ந்தேதி 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (21-ந்தேதி) வேளாண் பட்ஜெடை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 23-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் பங்கேற்று பேசி வருகிறார்கள். பின்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடந்த 2 நாட்கள் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக சட்டபேரவையில் இன்று பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன்பின்னர் பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடைபெற்றது.
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தமிழக சட்ட சபையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசமி, முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். குரூப் 4 தேர்வில் முறைகேடு விவகாரம் தேர்வ்ர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குரூப் 4 தேர்வு விவகாரத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குரூப்-4 தேர்வில் தட்டச்சர் முதுநிலை அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை மாவட்ட வாரியாக கேட்டுள்ளோம். காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 615 பேர் தேர்ச்சி குறித்து தேர்வு மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. முன்னதாக இதுபோன்ற தேர்ச்சி உள்ளதா என ஒப்பிட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டின்பிஎஸ்சி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு விளக்கம் அளித்தார்.