டிஎன்பிஎஸ்சி-ல் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்: பிடிஆர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வெளியான நிலஅளவையர் தேர்வு முடிவுகளில் 700 பேர் ஒரே தேர்வு மையத்தில் இருந்து தேர்ச்சி பெற்றவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் படித்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் சமீபத்தில் வெளிவந்த குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் தென்காசி பயிற்சி மையத்தில் பயின்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குரூப் 2 தேர்வில் வினாத்தாளில் வரிசை மாற்றம் ஏற்பட்டதும் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுபோல முறைகேடுகள் நடப்பதை அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறினார். 

அவரை தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், டிஎன்பிஎஸ்சியில் தமிழர் அல்லாத யார் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம் என கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மாற்றத்தால் தான் முறைகேடுகள் அதிகரித்ததாக கூறியதால் அவையில் அதிமுகவுக்கும் வேல்முருகனுக்கும் இடையே மோதல் உருவானது. இதையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நான் யாரையும் நேரடியாக குற்றம் சாட்டாமல் அரசின் கவனத்தை ஈர்த்தேன் என்றும், ஆனால் அதற்கு எதிர்வினையாக வேறு ஒருவரை வைத்து கடந்த அரசை குறை சொல்வது என்ன நியாயம்? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தியை பார்த்ததும் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளருக்கு அனுப்பி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் உரிய பதில் தருமாறு அனுப்பி உள்ளதாக கூறினார். மேலும், குரூப் 4 தேர்வு குறித்து பொதுவெளியில் வந்த தகவலுக்கும் என்னிடம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த தகவலுக்கும் சம்பந்தமே இல்லை என கூறிய அவர், தென்காசியில் மொத்தமே எட்டு மையங்கள் தான் உள்ளது என்றும், அதில் முதல் 500 பேரில் 27 பேரும் முதல் 1000 பேரில் 45 பேரும் முதல் பத்தாயிரம் பேரில் 397 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் எத்தனை மையங்களை நடத்துகிறார்? எங்கு எங்கு நடத்துகிறார்? என்பது குறித்து உரிய தகவல் என்னிடம் இல்லை என கூறிய அவர், குரூப் 4 தேர்வில் ஜூனியர் அசிஸ்டன்ட் மற்றும் டைப்பிஸ்ட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் ரேங்குகளில் மாற்றம் உள்ளதாக கூறுகிறார்கள். ஜூனியர் அசிஸ்டன்ட் தேர்வுக்கு சிறப்பு தகுதிகள் எதுவும் தேவையில்லை, ஆனால் டைப்பிஸ்ட் க்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் டைப்பிங் தெரிய வேண்டும். அதனால், ரேங்குகளில் மாற்றம் ஏற்படுவது இயல்புதான் என்றும் பி.டி.ஆர் தெரிவித்தார்.
 
இதேபோல், சர்வேயர் தேர்வுகளிலும் காரைக்குடி மையத்தில் முதல் 500 பேரில் 200 பேரும் முதல் 1000 பேரில் 377 பேரும் முதல் 2000 பேரில் 615 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். கடந்த காலங்களிலும் இதே போல் ஒரே தேர்வு மையத்தில் இதே போல் தேர்வு முடிவுகள் வந்துள்ளதா? என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலாளரிடத்தில் விளக்கம் கேட்டுள்ளதாக கூறினார். மேலும் டிஎன்பிஎஸ்சி பொருத்தவரைக்கும் அதில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என கூறியதோடு, 7000 இடத்துக்கு 24 லட்சம் பேர் தேர்வு எழுதுவது தேர்வுக்காக அரசு செலவு செய்யும் தொகை, தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஒரு தேர்வுக்காக இவ்வளவு செலவு செய்வது சரியான விதிமுறை அல்ல.  

தற்காலிக பணியாளர்களுக்கும், நிரந்தர பணியாளர்களுக்கும் உள்ள ஊதிய விகிதம் பல்வேறு மாறுதலுக்கு உட்பட்டதாக உள்ளது. தற்காலிக பணியாளர்களை முழுமையான பணியில் ஈடுபடுத்தி அவர்களுக்கும் வழங்கக்கூடிய ஊதியத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், இதற்காக தான் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கு தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டது. அது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது. அந்த அரசாணைக்கு அப்போது எல்லோருமே எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதை நடைமுறைக்கு கொண்டு வருவது அவசியமாவதாகவும், மாநிலத்தின் நலனுக்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.