கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது. இந்த தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத முறைகேட்டிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :- “டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து இரண்டாயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியுள்ளது.
இதற்கு முன்னதாக நில அளவர் தேர்வில், காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்றது குறித்து விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்த நிலையில், தற்போது, வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பது என்பது, அரசுப் பணிக்காக கடுமையாக உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது ஆகும்.
இந்த முறைகேடு தொடர்பாக தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும் அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்றது தெரிவித்துள்ளார்.