ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு ஆடை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்த நிலையில், பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனும் கருப்பு ஆடை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று கருப்பு உடை அணிந்து பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு ஆடை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர். அப்போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கருப்பு சேலை அணிந்து சட்டமன்றத்துக்கு வந்தார்.
அப்போது அவரிடம் ராகுல் காந்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து கருப்பு உடை அணிந்து வந்துள்ளீர்களா என கேட்டதும்தான் அவருக்கு நிலைமை புரியவந்தது.
அருகில் இருந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, வானதி சீனிவாசனின் தோளில் தட்டி அவரிடம் நீங்களும் எங்க சைடு தானா என்று கேட்க, தெரியாமல் கருப்பு உடை அணிந்து வந்துட்டதாக கூறி சமாளித்தார்.
தொடர்ந்து சட்டப்பேரவையில் வினா விடை நேரத்தில் சபாநாயகர் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடைகள் வந்திருக்கிறார்கள் அவர்களோடு சேர்ந்து நீங்களும் கருப்பு உடைகள் வந்து விட்டீர்களோ என நினைத்தேன் என கிண்டல் செய்தார்.
newstm.in