தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கு 1,089 நில அளவர்கள், வரைவாளர்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை ஐ.டி.ஐ, டிப்ளமோ சிவில், பி.இ சிவில் படித்த மாணவர்கள் 29,000-க்கும் மேற்பட்டோர் எழுதினர். பிப்ரவரி மாதம் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், காரைக்குடியில் இயங்கிவரும் ‘பிரமிடு’ பயிற்சி மையத்தின் மாணவர்கள் மட்டுமே 742 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இவர்களில் 302 மாணவர்கள் காரைக்குடியிலேயே தேர்வு எழுதியிருக்கின்றனர். இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தேர்வர்கள் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர்.
ஏற்கெனவே 2019-ம் ஆண்டு குரூப்-4 தேர்வில் கீழக்கரை, ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியோர் மட்டும் முதல் 100 இடங்களில் 35 இடங்களைப் பிடித்தது சர்ச்சையைக் கிளப்பியது. அதுவும் ஒரே குடும்பத்தில் 4 பேர் மாநில அளவில் ரேங்க் வாங்கியிருந்தனர். முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்து சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தியதில், 99 பேருக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுத வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு கெடுபிடிகளுடன் தேர்வு நடத்தப்படும்போதிலும், ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் மொத்த வேலையில் 70 சதவிகிதம் அளவுக்கு தேர்ச்சி பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. “வினாத்தாள்கள் கசிந்து இந்த முறைகேடு நடந்திருக்கும், எனவே விசாரணை அமைப்புகளைக் கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும்” என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெற்றி பெற்றவர்கள் முறையாகப் பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சிதான். ஆனால், மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்பதால், அது குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். கடந்த முறை நடைபெற்ற குரூப்- தேர்வில் இதேபோல சந்தேகம் எழுந்தபோது, விசாரணை நடத்தியதில் பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதிசெய்யப்பட்டது. நில அளவையர் தேர்விலும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா என்பதை நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆணையிட வேண்டும்” எனப் பதிவிட்டு வலியுறுத்தியிருக்கிறார்.
புயலைக் கிளப்பியிருக்கும் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றது கடந்த 5, 6 ஆண்டுகளில் ஏற்கெனவே நடந்தது உண்டா என டி.என்.பி.எஸ்.சி-யிடம் கேட்டிருக்கிறேன். பயிற்சி மையங்கள் வழியாகப் படித்து தேர்வு எழுதியவர்கள் மற்றும் மாவட்டரீதியாக தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கையில் தற்போதுபோல முன்பும் பெரும் வித்தியாசம் இருந்திருக்கிறதா என்றும் அறிக்கை தயாரித்து கொடுக்கச் சொல்லியிருக்கிறோம். டி.என்.பி.எஸ்.சி-யில் பல சீர்திருத்தங்கள் தேவை என்பதை ஏற்கெனவே நானே கூறியிருக்கிறேன்” என்றார்.
இந்தப் பணியிடங்களுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு பிப்ரவரி 6 முதல் 11-ம் தேதிவரை நடந்திருக்கிறது. தேர்வை ரத்துசெய்துவிட்டு மீண்டும் நியாயமாக நடத்த வேண்டுமென தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். “முறைகேடு நடந்ததா இல்லையா என்பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருவேளை முறைகேடு உறுதிசெய்யப்பட்டால் டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் அரசுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிப்பார்கள்” என்றனர். ஒருவேளை முறைகேடு உறுதிசெய்யப்பட்டாலும் தேர்வு ரத்துசெய்யப்பட வாய்ப்புகள் மிகக் குறைவுதான் என்றும் டி.என்.பி.எஸ்.சி வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.
கடந்த முறை குரூப்-4 தேர்வில் மோசடி நபர்களை நீக்கிவிட்டு, காலிப்பணியிடங்களை நிரப்பியதைப்போல இந்த முறையும் நடக்கலாம் என்கின்றனர். குரூப்-4 தேர்வு மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மோசடியில் சிக்கியவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால் இதில் 70% பேர் மோசடியாக தேர்வாகி இருக்கலாம் என்பது குற்றச்சாட்டு. எனவே அதே நடைமுறையை தற்போதும் பின்பற்றினால் எதிர்ப்புகள் வலுக்கக்கூடும். அரசு என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.