டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் காரணமாக மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.
இதனை தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனர் நாடாளுமன்றத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய 1 நிமிடத்தில், ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை மாலை 4 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாநிலங்களவை மதியம் 2 மணிக்கு தொடங்கிய நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களவை மாலை 4 மணிக்கு மீண்டும் தொடங்கிய நிலையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் எம்.பிக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.