ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரச்சலூர் ஜேகே நகரை சேர்ந்த திருஷ்டி பொம்மை வியாபாரி குமார் என்பவர் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார்.
அப்போது குமார் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்த போலீசார் ஓடி வந்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அவரை ஓரமாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:- “நான் அரச்சலூர் ஜெ.கே.நகரில் வசித்து வருகிறேன். திருஷ்டி பொம்மை வியாபாரம் செய்யும் நான், என் குடும்ப சூழ்நிலை காரணமாக அதே பகுதியை சேர்ந்த நான்கு பேரிடம் தனித்தனியாக கடன் வாங்கி இருந்தேன்.
அதற்காக மாதந்தோறும் வட்டியும் கட்டி வந்தேன். இருப்பினும், நான் வாங்கிய பணத்தை விட அதிக அளவில் வட்டி கட்டி வந்ததால் என்னால் சமாளிக்க முடியாமல், எனது வீட்டையும் விற்று கடனை அடைத்தேன்.
இருப்பினும், அவர்கள் நான்கு பேரும் என்னிடம் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர். நாளுக்கு நாள் அவர்களுடைய தொந்தரவு அதிகரித்ததால் என்னால் வியாபாரமும் செய்ய முடியவில்லை.
இதனால் தான் நான் தீ குளிக்க முயன்றேன். என்றுத் தெரிவித்தார். கந்து வட்டி கொடுமையால் வாலிபர் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.