சென்னை: தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் டெக்னாலஜி துறை நிறுவனங்கள் உலக அளவில் பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதனால் இந்தியாவை சேர்ந்த ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் இந்தியாவில் கல்லூரி வளாகத் தேர்வு சுமார் 25 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வணிகம் சார்ந்த செய்திகளை வெளியிட்டு வரும் முன்னணி இணைய ஊடக நிறுவனத்திடம் அவர்கள் பகிர்ந்து கொண்டது. “தற்போதைய மந்தநிலை இந்த ஆண்டு வளாகத் தேர்வை நிச்சயமாக பாதித்துள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக பல நிறுவனங்கள் தங்களது ஆட்தேர்வு திட்டத்தை மிகுந்த கவனமாக கையாண்டு வருகிறது. அதன் எதிரொலியாக நடப்பு ஆண்டில் வளாகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறையலாம்” என ஃபோர்கைட்ஸ் மனித வள இயக்குநர் (APAC) கல்யாண் துரைராஜ் தெரிவித்துள்ளார்.
வளாகத் தேர்வு முறையில் பணிக்கு ஆட்களை தெரிவு செய்வதில் நிறுவனங்களின் எண்ணிக்கை 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கல்லூரி பிளேஸ்மெண்ட் செல் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதனை டெல்லியில் இயங்கி வரும் முன்னணி பொறியியல் கல்லூரி உறுதி செய்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு இடையே வளாகத் தேர்வில் கடுமையான போட்டி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆஃபர் லெட்டர் கிடைக்கப் பெறவில்லை என என தெரிவித்துள்ளனர்.