புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை ஆலை நிர்வாகம் மேற்கொள்ள தமிழக அரசுக்கு ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நச்சுப்பொருட்கள் வெளியேற்றப்படுவதாக கூறி நடந்த போராட்டத்தின்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதனையடுத்து ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது.
இதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து ஆலை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பலமுறை ஆலையை திறக்கவும், பராமரிக்கவும் அனுமதி வழங்க மறுத்திருந்தது.அதேநேரம் கரோனா சமயத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மட்டும் மேற்கொள்ள இடைகாலமாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக மூடப்பட்டது.
இந்நிலையில், ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி ஆலை நிர்வாகம் தரப்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், ஆலை நிர்வாகம் தரப்பில் ஸ்டெர்லைட் ஆலையினுள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசுக்கு ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா என கேள்வி எழுப்பினர்
அதற்கு தமிழக அரசு தரப்பில், இது தொடர்பாக அரசிடம் உரிய விளக்கங்களை பெற்று தெரிவிப்பதாக கூறினார். அப்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வேலை இல்லாமல் கடுமையான சிரமம் ஏற்பட்டுள்ளது எனக்கூறி, உள்ளூர் பொதுமக்கள் சார்பாக இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனையும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஸ்டெர்லைட் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஏப்ரல் 10ம் தேதி விசாரிக்கப்படும் எனக் கூறி, வாழ்க்கை ஒத்திவைத்தார்.