சட்டப்பேரவை: 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி எது?' – அதிமுக-திமுக இடையே அனல் பறந்த விவாதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசத் தொடங்கிய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி, அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் புகழ்ந்து உரையைத் தொடங்கினார். அப்போது அவர், “ `கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எதிரிகளே இல்லை’ எனச் சொல்லியவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்” என்றார்.

அப்போது எழுந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “ `கண்ணுக்கு எட்டியவரை எதிர்களே இல்லை’ எனச் சொல்லியது இந்த ஆட்சியில் அல்ல. அது 2016-ம் ஆண்டு சொல்லப்பட்டது. அப்போது சுறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த ஆண்டு 98 உறுப்பினர்கள் வெற்றிப் பெறச் செய்து எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தவர் தற்போதைய முதல்வர்” என்றார்.

தங்கமணி

அதற்கு தங்கமணி, “நாங்கள் உங்களைச் சொல்லவில்லை. சொன்னவரைச் சொல்கிறோம். நீங்கள் ஏன் ’எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ எனத் தேவையில்லாமல் பேசுகிறீர்கள்” என்றார். மீண்டும் சேகர் பாபு, ”வெளிப்படையாகச் சொல்கிறேன், வேண்டுமென்றால் ஒரு மணி நேரம் அவகாசம் தாருங்கள் அப்போதைய முதல்வர் (ஜெயலலிதா) அவர்கள் இந்த வார்த்தைகளைப் பேரவைக்குள்தான் சொன்னார் என்பதை நிரூபிக்கிறேன்” என்றார்

அப்போது எழுந்த எடப்பாடி பழனிசாமி, “உங்களை (சேகர் பாபு) உருவாக்கியதும் புரட்சித் தலைவி அம்மாதான்” என்று சொன்னார். அவரின் பதிலுக்கு அ.தி.மு.க சார்பாக மேசை தட்டப்பட்டது.

சேகர் பாபு

மீண்டும் பேசிய சேகர் பாபு, “யார் யாரை உருவாக்கியது என்பது வாதமல்ல. இந்த அவையில் பேசியது என்ன என்பதே வாதம். ’யார் யாரை உருவாக்கினார்கள், யார் யாரால் உருவாக்கப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்கள்’ என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்” என்றார்.

அதற்குப் பதிலளித்த தங்கமணி, “உங்கள் தலைவர் எப்படி முதலமைச்சரானாரோ… அப்படித்தான் எங்கள் தலைவரும் முதலமைச்சரானார். இடைத்தேர்தலில் பேசியவர்களை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொன்னேன்” என விளக்கினார்.

எடப்பாடி பழனிசாமி

அவர் கூறியதை ஏற்காமல், மீண்டும் சேகர் பாபு, “கடந்த காலத்தில் ஏற்பட்ட சிறு விபத்தாலும், குழப்பத்தாலும் முதல்வரானவர் உங்கள் தலைவர் (பழனிசாமி). ஆனால், தேர்தலில் இவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எங்கள் முதல்வர் (ஸ்டாலின்)” என உரத்த குரலில் அமைச்சர் கூறியதும்… ஒட்டுமொத்த உறுப்பினர்களும் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் தொடர்ந்த அவர், “இது பற்றி மேலும் பேசினால், அவர் எப்படி முதல்வர் பதவிக்கு வந்தார் என்பதை விளக்கமாகச் சொல்ல நேரிடும்” என்று கூறி அமர்ந்தார்.

பின்னர் தொடர்ந்து பேசிய அ.தி.மு.க உறுப்பினர் தங்கமணிக்கு, தி.மு.க அமைச்சர்கள் சார்பாகப் பதில்கள் கொடுக்கப்பட்டன. அப்போது அவைத்தலைவர் குறுக்கிட்டு தங்கமணியை, `சீக்கிரம் முடியுங்கள்’ என்றார். உடனே தங்கமணி, `எங்க நா பேசவே இல்ல… அதுக்குள்ள முடிங்கனு சொல்றீங்க’ என்றார். அதற்கு அப்பாவு, “நா சொல்லல எதிர்க்கட்சித் தலைவர் மூணு மணியாகிடுச்சுனு முடிங்கங்கறாரு” என கோத்துவிட்டார்.

சபாநாயகர் அப்பாவு

அதைத் தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் மும்முனை மின்சாரம் கொடுப்பது தொடர்பாக ஒரு பெரிய விவாதம் அதிமுக-திமுக இடையே நடந்தது.

அப்போது பேசிய தங்கமணி, “தமிழக மக்களை ஆட்சி செய்ய மட்டும்தான் மக்கள் வாக்களித்தனர். ஆனால், மின்சார விலையை உயர்த்திவிட்டு மற்ற மாநிலங்களைப் பாருங்கள் . அங்குவிட இங்கு குறைவு எனச் சொல்வது சரியா?” என்றார்.

இதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி, “அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது எந்த மாநிலங்களை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள் என்பது அவைக்குறிப்பில் இருக்கிறது. மானியத்தை வழங்க மாட்டோம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்ததால் கட்டணம் உயர்த்தப்பட்டது” என்றார்.

உடனே தங்கமணி, “கடந்த அ.தி.மு.க ஆட்சியில், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை வழங்காமல் இருக்கிறார்கள்” என குற்றச்சாட்டை முன்வைத்தார்.

செந்தில் பாலாஜி

அதற்குப் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “அ.தி.மு.க ஆட்சியில் 1.4.2021-ம் தேதி முதல் மும்முனை மின்சாரம் வழங்குவோம் என அரசாணை வெளியிட்டனர். தேர்தல் வருகிறது என்பதை உணர்ந்து வேண்டுமென்று அப்படியான அறிவிப்பை மட்டும் வெளியிட்டனர். அரசாணை மட்டும் வெளியிட்டு என்ன செய்வது. வெறும் சர்க்கரை என எழுதினால் இனிக்குமா? ஒருவேளை, தேர்தலில் வெற்றிப் பெற்று தி.மு.க கொண்டு வரும் என நம்பிக்கை வைத்து வெறும் அரசாணையை மட்டும் வெளியிட்டிருப்பார்களோ… என்னவோ? அப்படியானால் அவர்கள் நம்பிக்கையைத் தற்போது ஆட்சியிலிருக்கும் தி.மு.க நிச்சயம் காப்பாற்றும். அதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு திட்டம் சென்றடையும்” என்றார்.

மின்சாரம்

இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாங்கள் மும்முனை மின்சாரத் திட்டத்தை அறிவித்தோம். ஆனால், அதன்பிறகு தேர்தல் அறிவிப்பார்கள் என எங்களுக்குத் தெரியாது. ஆனால், உங்கள் ஆட்சியில் மின்சாரம் உற்பத்தி குறைந்து, அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால், மின்வெட்டும் சேர்ந்தே வந்துவிடுகிறது. எப்போதும் ஆட்சி மாற்றமடையும், ஆனால் திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். நீங்கள் ஆட்சிக்கு வந்தால், திட்டத்தை நீங்கள்தான் செயல்படுத்த வேண்டும். நாங்களா செய்ய முடியும்?” என வினவினார்.

இதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி, “ ’தி.மு.க ஆட்சியில் மின் தடை ஏற்படுகிறது’ என தவறான தகவலைச் சொல்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் எந்தக் கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை. கிட்டத்தட்ட 234 தொகுதிகளில் 80,000-க்கும் அதிகமான மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை மின் தடை குற்றச்சாட்டு இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிக்கட்டும். நாங்கள் வீட்டுக்கே சென்று ஆய்வு செய்ய தயார்” என்றார் காட்டமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.