திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய, தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வந்த ரூ.30 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய அந்த பணத்தை யார், எப்படி வழங்கினர் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விளக்கம் தர வேண்டும்.
ஆனால் வெளிநாட்டு பணத்தை காணிக்கையாக செலுத்திய பக்தர்களின் விவரத்தை தேவஸ்தானத்தால் கண்டுபிடிக்க முடியாததால் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ளது. மேலும் வெளிநாட்டு பணத்தை டெபாசிட் செய்த பக்தர்களின் விவரங்களை வழங்காத காரணத்தினால் ரிசர்வ் வங்கி திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.3.29 கோடி அபராதம் விதித்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் பேசி விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.