காபுல்,
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேவேளை, ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு உள்பட பிற பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபுலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் உள்ளது. மாலிக் அசார் சதுர்க்கம் அருகே அமைந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் நோக்கி இன்று உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு பயங்கரவாதி வந்துள்ளார்.
அந்த நபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வருவதை அறிந்த பாதுகாப்பு படையினர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அப்போது, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை பயங்கரவாதி வெடிக்கச்செய்தார்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், பாதுகாப்பு படையினர் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.