விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஈயக்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கு சுப்பிரமணியன், மீனாட்சி, சக்திவேல், மாரிமுத்து என நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் முதல் மூன்று பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகிவிட்ட நிலையில், மாரிமுத்துவுக்கு மட்டும் திருமணமாகவில்லையாம். இந்த நிலையில், கட்டடக் கூலி வேலை செய்துவந்த பாலகிருஷ்ணனின் மூத்த மகன் சுப்ரமணியன், சமீபகாலமாக குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார். மேலும், வேலைக்கும் செல்லாமல் இருந்துவந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை தந்தை பாலகிருஷ்ணன் கண்டிக்கும் சமயங்களில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது.
அவ்வாறே நேற்று இரவும் மது போதையில் வந்த சுப்பிரமணியனுக்கும் அவரின் தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இந்த நிலையில் இன்று அதிகாலையில் 7:30 மணி அளவிலும் போதையில் இருந்த சுப்ரமணியனை அவர் தந்தை கண்டித்தாராம். அப்போது தந்தை – மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், சமையலுக்குப் பயன்படுத்தும் கத்தியை எடுத்து, தந்தை பாலகிருஷ்ணனின் முதுகு, மார்பு பகுதிகளில் சரமாரியாகக் குத்தியிருக்கிறார்.
இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அலரல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணியனை மடக்கிப் பிடித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான வளத்தி போலீஸார், சுப்பிரமணியனைக் கைதுசெய்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் கிடந்த பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காலையிலேயே மது போதையில் இருந்த மகன், தன்னை கண்டித்த தந்தையைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த சம்பவம் செஞ்சி சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.