திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல்: ரூ.1.14 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி

திருமலை: திருப்பதி உண்டியலில் செலுத்தப்படும் வெளிநாட்டு பணத்தை டெபாசிட் செய்வதற்கு வங்கி நிர்வாகம் தடை விதித்ததால் 26 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒன்றிய அரசு 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதும் அம்பலமாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் திருமலை பெருமாள் கோவில் மற்றும் 70 இதர கோவில்கள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் ரூ.1,450 கோடி உண்டியல் வசூல் கிடைத்துள்ள நிலையில் தற்போது திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு நன்கொடையை அனுமதிப்பதில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதால் நன்கொடை கொடுத்த நபரின் பெயரை அறிவிக்க வேண்டும் ஆனால் உண்டியலில் போடும் நபர்களை அடையாளம் காண முடியாத நிலை உள்ளதால் தமக்கு கிடைத்த வெளிநாட்டு நன்கொடையை வங்கியில் செலுத்தி இந்திய ரூபாயாக மாற்ற முடியாமல் திருப்பதி தேவஸ்தானம் தவித்து வருகிறது.

உண்டியல் நன்கொடைகள் என விவரிக்கப்படும் வெளிநாட்டு பங்களிப்புகளை டெபாசிட் செய்வதற்கு பாரத் ஸ்டேட் வங்கி தடை செய்துள்ளது. இதன் காரணமாக வெளிநாட்டு நன்கொடையாக கடந்த ஓராண்டில் கிடைத்த 26.86 கோடி ரூபாயை மாற்ற முடியாத ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முறையிட்டது.

அதில் 15.5 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர், 5.9 கோடி மலேசியன் ரிங்கிட்ஸ், 4.6 கோடி மதிப்புள்ள சிங்கப்பூர் டாலர் கிடைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பரிசீலனை செய்த உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு நிதி பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டு வரவு செலவு அறிக்கையில், தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.3.19 கோடி அபராதம் விதித்துள்ளது.

பிரச்சனைக்கு தீர்வு காண ஆந்திர அரசின் உதவியை திருப்பதி தேவஸ்தானம் நாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.1.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.