புதுடெல்லி: உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 14-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இது தொடர்பான அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப் பொருளாக சுட்டிக்காட்டவில்லை. சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றியே தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க இந்த இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை. தடை விதிக்கும் அதிகாரத்தையும் வழங்கவில்லை. குறிப்பிட்ட வழக்குகளில் நீதிபதிகள், உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து, அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கே.என்.ஜோசப் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை ஒத்திவைக்க கோரி புகையிலை நிறுவனங்கள் தரப்பில் ஏற்கெனவே கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு மீதான விசாரணையை ஏப்ரல் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்