வெளி மாநிலங்களிலிருந்து கடத்திவரப்படும் கஞ்சா போதைப்பொருளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதில் தமிழக காவல்துறையினர் தீவிரம் காட்டிவருகிறார்கள். ஆனாலும், சாலை மார்க்கமாகவும் ரயில் மூலமாகவும் கஞ்சா கடத்தல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், கஞ்சா விற்பனையாளர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது.
அதன்படி, தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அழிக்க காவல்துறையினர் முடிவுசெய்தனர்.
இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட 1,211 கிலோ எடைகொண்ட கஞ்சாவை தீயிலிட்டு அழிக்க முடிவுசெய்யப்பட்டது. சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புடைய கஞ்சாவை அழிக்க நீதிமன்றத்தின் அனுமதியை காவல்துறையினர் பெற்றனர். அதைத் தொடர்ந்து தென் மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க் உத்தரவுப்படி நெல்லையில் வைத்து அவை அழிக்க முடிவுசெய்யப்பட்டது.
நெல்லை டி.ஐ.ஜி-யான பிரவேஷ்குமார், தலைமையில் தென் மண்டல கஞ்சா ஒழிப்பு கமிட்டி உறுப்பினரும் நெல்லை மாவட்ட எஸ்.பி-யுமான சரவணன், மதுரை மாநகர துணை ஆணையாளர் சாய் பிரனிஷ் ஆகியோர் முன்னிலையில் நெல்லை மாவட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பாப்பாங்குளம் கிராமம் பொத்தையடியிலுள்ள தனியார் மையத்தில், பிடிபட்ட கஞ்சா அனைத்தும் தீயிலிட்டு அழிக்கப்பட்டது.