பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகவும், புகாரின் முக்கியத்துவம் கருதாமல் நிர்வாகம் நடந்துகொண்டுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் சேர்மன் ராமதுரைக்கு பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலாஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த ஆசிரியர் ஒருவர் மீது அங்கு படிக்கும் மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ’கேர் ஸ்பேஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் பேசியபோதுதான் இந்த பிரச்சனை வெளியே தெரிய ஆரம்பித்தது. இதுபற்றி அறிந்த உடன் கலாஷேத்ரா நிறுவனம், விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தியுள்ளது. ஆனால் இறுதியில் “பாலியல் குற்றச்சாட்டுகள் பொய் என்றும், தங்களது அறக்கட்டளையை இழிவுபடுத்தும் நோக்கில் இப்படி வதந்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது” என்றும் கூறி விசாரணைக் குழுவை முடித்தது.
இந்த நிலையில் கலாஷேத்ராவில் எழுந்துள்ள பாலியல் துன்புறுத்தல் மற்றும் அது பற்றிய புகார்கள் தொடர்பாக பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா கலாஷேத்ராவின் சேர்மன் ராமதுரைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகவும், இந்த புகாரின் முக்கியத்துவம் கருதாமல் நிர்வாகம் நடந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிலரால் நிறுவனத்தின் மீது அரசியல் மற்றும் மதத் தூண்டுதலால் இழிவுபடுத்தப்படுவதைக் கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், ”இளம் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மீது அக்கறையும் கருணையும் இருந்தால் ஒழிய, எந்தவொரு விசாரணையும் பயனுள்ளதாக இருக்காது என்பது கலாஷேத்ரா நிர்வாகத்திற்கு தெரியும். இடம் இவ்வளவு படிநிலையாக இருக்கும்போது, யாரும் சுதந்திரமாக, பயமின்றி பேச மாட்டார்கள். வந்து கலை பயிலும் மாணவர்களில் பலர் நடுத்தர குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்; கலை தாகத்தோடு வந்தவர்கள்.
தனது ஆசிரியர் சீதாராம சர்மா, அங்கு 24 ஆண்டுகள் பணியாற்றினார். அவரைப் பார்த்து, தான் வளர்ந்தேன். கலாஷேத்ராவின் மீது நன்மதிப்பு வைத்துள்ளவர்கள் குரல் கொடுப்போம்” அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ள கிருஷ்ணா, ”இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன், ”10 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களால் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்களைச் சந்திக்கின்றனர்” என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், பின்னர் அந்தப் பதிவை அவர் நீக்கியும் இருந்தார். இந்நிலையில் பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM