எங்களுக்கு குண்டு வைக்க தெரியும் என்று கூறிய முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபு விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பிய போது, அதேபகுதியின்
கவுன்சிலரான சின்னசாமி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அதைத் தொடர்ந்து கவுன்சிலர் ஆதரவாளர்கள் தாக்கியதில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.
இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், குடும்ப பிரச்சனையால் இந்த சம்பவம் நடந்தது என்பதையும் உறுதிபடுத்திய பின்னரும் தமிழ்நாட்டில் ராணுவ வீரர்களை திமுகவினர் தாக்கியதாக பாஜக அரசியல் செய்தது. அதைத் தொடர்ந்து போராட்டங்களிலும் ஈடுபட்டது.
இந்தநிலையில் ராணுவ வீரர் பிரபுவின் படுகொலையை கண்டித்தும், பாஜக பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமியின் இல்லம் தாக்கப்பட்டதை கண்டித்தும் தமிழக பாஜக சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ஓய்வு பெற்ற ராணுவ வீரரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான கர்னல் பாண்டியன், “திமுக கொள்ளை அடிப்பதிலும், கொலை செய்வதிலும் தைரியமானவர்கள். ராணுவத்தில் பணியாற்றிய எங்களைப் போன்றவர்களுக்கு வெடிகுண்டு வைக்கத் தெரியும். துப்பாக்கி சுடுவதிலும், சண்டை போடுவதிலும் நாங்கள் கெட்டிக்காரர்கள்.
உலகத்திலேயே மிகப்பெரிய ஒழுக்கமான ராணுவம் இந்திய ராணுவம், அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழகத்திற்கு நல்லதல்ல, தமிழக அரசுக்கும் நல்லதல்ல, நாங்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் ஒழுக்கமாக செய்பவர்கள், அப்படிப்பட்ட எங்களுக்கு பரிட்சை வைத்து பார்க்க நினைத்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது. எனவே எங்களை குண்டு வைத்து விட விடாதீர்கள், எங்களை சீண்டினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும்’’ என்று தமிழ்நாடு அரசுக்கு அவர் மிரட்டல் விடுத்து பேசினார்.
இபிஎஸ்-ஐ காண குவிந்த கூட்டம் நிலை தடுமாறிய முன்னாள் எம்எல்ஏ!
அதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கர்னல் பாண்டியன் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில், இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கர்னல் பாண்டியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்னல் பாண்டியன் நேரில் ஆஜராகி இருந்தார். அவர் சார்பில் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார்.
மனுதாரர் சார்பில், இதுபோல் மிரட்டல் விடுக்கும் விதமாக இனி பேச மாட்டேன் என்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, திருவல்லிக்கேனி காவல்நிலையத்தில் ஒரு வாரத்திற்கு கையெழுத்து போட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.