உடுமலை: உடுமலை அருகேயுள்ள பஞ்சலிங்கம் அருவி நேற்று சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் நாள்தோறும் திருமூர்த்தி மலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். இங்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம். இந்நிலையில், கோடை வெயில் காரணமாக அருவியில் மிதமான அளவே தண்ணீர் கொட்டுகிறது.
மேலும் தற்போது பள்ளிகளில் இறுதியாண்டு தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகள் நடந்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் பஞ்சலிங்க அருவி வெறிச்சோடி கிடக்கிறது. கடும் வெயில் கொளுத்துவதால் உள்ளுர் மக்கள் மட்டும் அவ்வப்போது வந்து குளித்து செல்கின்றனர்.