வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள 65 ஏக்கர் வவுனியா விவசாய பண்ணை காணியையும் மத்திய அரசின் கீழ் கொண்டு வரும் வகையில் ஆளுநர் கடிதம்
அனுப்பியுள்ளார்.
வவுனியா – ஏ9 வீதி, தாண்டிக்குளத்தில் விவசாய கல்லூரிக்கு அண்மித்ததாக விவசாயபண்ணை காணப்படுகின்றது.
குறித்த விவசாய பண்ணையானது 65 ஏக்கர் நிலப்பரப்பைக்
கொண்டுள்ளதுடன், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஆளுகையின் கீழ் உள்ளது.
இந்நிலையில், அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகக் குறித்த வடக்கு
மாகாண விவசாய அமைச்சின் காணியை மத்திய அரசின் கீழ் செயற்படும் பிரதேச
செயலாளரிடம் கையளிக்குமாறு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணியை விடுவிக்க மறுப்பு
விவசாய பண்ணை அமைப்பதற்கு ஓமந்தையில் 100 ஏக்கர் காணி வழங்கப்படும் எனவும்
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாண சபை இயங்கிய போது வவுனியா பொருளாதார மத்திய நிலையம்
அமைப்பதற்குக் குறித்த காணியைக் கோரியது.
இதன்போது மாகாணசபை இக் காணியை விடுவிக்க
மறுத்திருந்த நிலையில், பொருளாதார மத்திய நிலையம் மதவுவைத்தகுளத்தில்
அமைக்கப்பட்டுப் பல வருடங்களாக பூட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.