டெல்லி: அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்ற தீர்ப்பையடுத்து வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு ராகுல் காந்தி 2005ம் ஆண்டு முதல் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி 2005ம் ஆண்டு முதல் வசித்துவரும் துக்ளக் லேன் பங்களாவை காலி செய்யும்படி மக்களவை வீட்டுக் குழுவில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அந்த நோட்டீஸ் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று ராகுல் காந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்பியும் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான நசீர் ஹுசைன் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “இதை பாஜக செய்யும் என எதிர்பார்க்கப்பட்டதுதான். எதிர்ப்புக் குரல்களை அடக்க அவர்கள் எல்லாவிதமான தந்திரங்களையும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ராகுலை வஞ்சகமான வழிகளில் நாடாளுமன்றத்தில் இருந்தே வெளியேற்றிவிட்டனர் என்பதனால் இது ஒன்றும் புதிதல்ல” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, துக்ளக் லேன் பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஏப்ரல் 23 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.