திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி ஒருவருடைய இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது:- “பதவி வெறியாலும் ஒரு சிலரின் சுய நலத்தாலும் அ.தி.மு.க தொடர்ந்து பலத்தை இழந்து வருகிறது. அதனை ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் இணைந்து மீட்டெடுப்போம்.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுத வராதது குறித்து அத்துறையின் அமைச்சர் புள்ளி விவரத்தை வெளியிட வேண்டும். பதவி பிழைப்பு, சொந்த பிரச்சினை போன்றவற்றின் காரணமாக ஒரு சிலர் அ.ம.மு.க வில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றும் கட்சி மாறுகிறார்கள்.
சமீபத்தில் அதிமுக எதிர்கட்சித் தலைவர் கட்சியில் ஒரு லட்சம் பழனிசாமிகள் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். அவரே ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்து பதவியில் இருக்கும் ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ராகுல்காந்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அவரை பதவி நீக்கம் செய்திருப்பது குறித்து கருத்து கூற எதுவுமில்லை” என்றுத் தெரிவித்தார்.