சென்னை, :நாடு முழுதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநில பாதிப்புகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணையதள பக்கத்தில் பதிவு செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் ராஜேஷ் பூஷண், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனை, நோய்த் தொற்றுக்கு ஆளானோரைக் கண்டறிதல், சிகிச்சை, தொடர் கண்காணிப்பு, நோய்த் தடுப்பு ஆகிய ஐந்து நிலைகளில், அதைக் கட்டுப்படுத்தி வருகிறோம்.
தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு அதிகாரிகளிடம் விளக்கினோம்.
தமிழகத்தில் உள்ள 342 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் இருந்து, ஐ.சி.எம்.ஆர்., இணையப் பக்கத்தில் பரிசோதனை விபரங்கள் தினமும் பதிவேற்றப்பட்டு வந்தன. அதன் அடிப்படையில், மத்திய அரசு கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்தது.
கொரோனா பாதிப்பு குறைந்தவுடன், இந்த பதிவேற்றத்தில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, மீண்டும் பாதிப்பு விபரங்களை முறையாக பதிவேற்றும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, அனைத்து ஆய்வகங்களுக்கும் பொது சுகாதாரத் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்