கடந்த ஆண்டு ஜூலை 11ல், பழனிசாமி தரப்பில் கூட்டப்பட்ட அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலர் தேர்தல் நடத்த தடை கோரியும், ஓ.பன்னீர்செல்வம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி, எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கில், எந்த இறுதி தீர்ப்பும் வெளியாகாத நிலையில், பொதுச்செயலர் பதவிக்கான தேர்தல், வரும் 26ம் தேதி நடத்தப்படும் என, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அறிவித்தனர். அப்பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலர் தேர்தல் ஆகியவற்றிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தொடர்ந்த வழக்கில் இன்று (மார்ச்.28) காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ளது.
முன்னதாக பொதுச்செயலர் தேர்தலுக்கு தடை கோரி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன், அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லுமா? என்பது இன்று தெரியவரும். கடந்த மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி இருந்தார். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கிலேயே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான் பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது. இதனால் தமிழக அரசியல் களத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.