புதுடில்லி, ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது.
நாட்டின் 75வது சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் நுாற்றாண்டு தினம் ஆகியவற்றை முன்னிட்டு, கடந்த ஆண்டு அக்., 2ல், தமிழகத்தின் 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு திட்டமிட்டது.
பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்த பேரணிக்கு தமிழக போலீசார் அனுமதி மறுத்தனர்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் அடங்கிய அமர்வு முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிட்டதாவது:
ஒரே நாளில், 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதி அளிக்க முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் ஐந்து இடங்களில் பேரணி நடத்த அனுமதி அளிக்க முடியும். பேரணிக்கு முழுமையான தடை விதிக்கவில்லை.
நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் பேரணி நடத்த சட்டத்தில் இடமில்லை.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி வாதிடுகையில், ”உள்ளரங்கு நிகழ்வாக ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்குவதாக கூறுகின்றனர்.
”பொது இடத்தில், அமைதியான முறையில் கூடி, பேரணி நடத்துவதற்கான உரிமையை யாரும் மறுக்க முடியாது. இது பேரணி நடத்தியதன் வாயிலாக உருவாக்கப்பட்ட நாடு,” என, வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்