திருவள்ளூர்: உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோடைகாலம் துவங்கிய சூழலில் பொது மக்கள் வெயிலின் தாக்கத்தைக் குறைக்க, பலவித குளிர் பானங்கள் மற்றும் பழச்சாறுகளை அருந்தும் சூழல் காணப்படுகிறது. அதனால் மாவட்டம் முழுவதும் சாலையோர மற்றும் நிரந்தர குளிர்பான கடைகளில் பரவலாக பொதுமக்களின் நுகர்வு அதிகரித்துள்ள இந்த தருணத்தில் வணிகர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர் பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குதலை உறுதி செய்திட வேண்டும்.
சாலையோர உணவு வணிகர்கள் உட்பட அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம். குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப் பொருட்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவு பொருட்களாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் குடிநீர் தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற குடிநீராக இருத்தல் அவசியம். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலான செயற்கை வண்ணங்களை சேர்த்தல் கூடாது. நுகர்வோருக்கு வழங்கும் முன்னர் அதன் காலாவதி நாளை உறுதிப்படுத்திட வேண்டும். பழச்சாறு தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் அழுகிய, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் பயன்படுத்தக் கூடாது. மிக்சி போன்ற பிழிப்பான்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். பழச்சாறு பிழியும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர் தன் சுத்தத்தை பராமரித்தல் வேண்டும்.
எந்த விதமான செயற்கை வண்ணங்களையும், இனிப்பு சுவை கூட்ட எவ்விதமான வேதிப்பொருட்களையும் சேர்க்கக்கூடாது. பழசாற்றில் சேர்க்கப்படும் ஐஸ் கட்டிகளை உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று பாதுகாப்பான நீரில் தயாரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வாங்குதல் வேண்டும். முறையான மற்றும் தொடர்ச்சியான பூச்சி தடுப்பு முறைகளை பயன்படுத்தி பூச்சிகள் மொய்ப்பதை தவிர்த்தல் வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி கோப்பைகளில் பழச்சாறுகளை வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கோப்பைகளில் மட்டுமே வழங்க வேண்டும். குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கும்போது வணிகர்கள் தரக் குறியீடு, உணவு பாதுகாப்பு உரிமம், கொள்கலன்களின் வாய்ப்புறம் சீலிட்டு மூடியிருத்தல் மற்றும் காலாவதி நாள் போன்றவற்றை உறுதி செய்திட வேண்டும். மேலும் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் குடிநீர் கொள்கலன்களை சூரிய ஒளிபடும்படி வைக்கக் கூடாது.
இத்தகைய வழிகாட்டுதல்களை கடைபிடித்து பொதுமக்களுக்கு தரமான பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளை வழங்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் உணவு வணிகர்களை கேட்டுக் கொள்கிறது. பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க போதுமான அளவு உடலின் நீர்ச்சத்தை பராமரித்து உடல் நலனை காக்க நீர், மோர் மற்றும் இளநீர் போன்றவற்றை அருந்துதல் மிகவும் நலம் பயக்கும். பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை 9444042322 என்ற கைபேசி எண்ணில் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.