அரசு நிர்வாகத்துறைகளான மாநகராட்சி, நகராட்சிகள் விதிக்கும் வரிகளை கட்ட முடியாமல் போனால் பலகட்ட எச்சரிக்கைகளுக்கு பிறகு பைக், டிராக்டர் போன்றவையோ, சமயங்களில் வீட்டையே ஜப்தி செய்வதும் வாடிக்கை. ஆனால் குடிநீருக்கான வரியை கட்டாமல் இருந்தவரின் எருமை மாட்டை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்த நிகழ்வு மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது.
குவாலியரில் உள்ள தலியான்வாலா பகுதியைச் சேர்ந்த பால்கிஷன் பால் என்ற பால் வியாபாரி 1 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்க்கான வரியை கட்டாததால் மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
ஆனால் அதிகாரிகளின் நோட்டீஸுக்கு எந்த பதிலும் அளிக்காமல், வரியையும் கட்டாமல் போக்குக்காட்டி வந்திருக்கிறார் பால்கிஷன். இதனையடுத்து குறிப்பிட்ட காலத்துக்குள் வரியை செலுத்தியே ஆக வேண்டும் என்ற இறுதி கெடுவையும் விதித்து மீண்டுமொரு நோட்டீஸும் அனுப்பப்பட்டிருக்கிறது.
அப்போதும் பால்கிஷன் அதனை புறக்கணித்ததால் அரசு அதிகாரிகள் நேரடியாக அவரது வீட்டுக்கேச் சென்று அவரிடம் இருந்த எருமை மாட்டை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக பேசியுள்ள குவாலியர் குடிமைப்பணி செயல் பொறியாளர் சஞ்சய் சிங் சொலன்கி, “நிலுவையில் உள்ள வரியை கட்டாதவர்களின் அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய உரிமையுண்டு. ஆகையால் பால்கிஷனின் எருமை மாட்டை பறிமுதல் செய்தோம். அவர் வரியை கட்டிவிட்டால் அதனை விட்டுவிடுவோம்” என்றிருக்கிறார்.
முன்னதாக பேசியுள்ள குவாலியர் மாநகராட்சி ஆணையர் கிஷோர் கன்யால், “வரியை கட்டாமல் இழுத்தடித்து வந்த பால்கிஷனின் எருமையை பறிமுதல் செய்திருக்கிறோம். நோட்டீஸ் அனுப்பியும் வரி கட்டாததால் குர்கி முறையை கையில் எடுத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM