சென்னை: பசுமை மின்வழித் தடம் 2-ம் கட்டபணிகள் 2 மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் தமிழகத்துக்கு கூடுதலாக 4,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
தமிழகத்தில் 4 ஆயிரம் மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை கையாளும் வகையில், ‘கிரீன் எனர்ஜி காரிடார்-2’ என்ற பசுமை மின்வழித் தடம் 2-ம் கட்ட திட்டத்தை 2025-26-ம் ஆண்டுக்குள் முடிக்க மத்திய மின்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, புதிய மின்வழித் தடங்கள், மின்மாற்றிகள் அமைக்கப்பட உள்ளன. மின்வழித் தடம் அமைக்கும் பணியை மாநில மின் தொடரமைப்பு கழகம் மேற்கொள்ளும்.
இத்திட்டத்தின்படி, திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் 400 கிலோ வோல்ட் துணைமின் நிலையம், கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல், திருப்பூர் மாவட்டம்
பூலவாடியில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டப் பணிகளை ரூ.719.76 கோடியில் மேற்கொள்ள மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இதில், மத்திய அரசு ரூ.237.52 கோடி நிதியுதவி வழங்கும். ஜெர்மனி நாட்டின் கே.எஃப்.டபிள்யூ வங்கி ரூ.338 கோடியை கடனாக வழங்கும். எஞ்சிய தொகையை தமிழக மின்வாரியம் வழங்கும். இதற்காக, கடந்த 2022-ல் அந்தவங்கியுடன் மின்வாரியம் ஒப்பந்தம் செய்தது.
பணி நிலவரம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியபோது, ‘‘2-ம் கட்ட பசுமை மின்வழித் தடத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு பணிக்கும் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்குள் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.