வாஷிங்டன்: ராகுல் காந்தி மீதான வழக்கை உற்றுநோக்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனநாயக மாண்புகளை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை முதன்மை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், “நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டமும், நீதித்துறை சுதந்திரமும் தான் ஜனநாயகத்தின் அடையாளம். நாங்கள் ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஜனநாயக மாண்பைப் பேணுவது, கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வது போன்றவற்றில் இந்தியா அமெரிக்கா ஒருமித்த மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்கிறது. மனிதநேயத்தைப் பேணுதல் என்பது இருநாடுகளில் ஜனநாயகக் கொள்கைகளில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கா நல்லுறவைப் பேணும் நாடுகளின் எதிர்க்கட்சிகளுடனும் சுமுக உறவைப் பேணவே விரும்புகிறது” என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஆனால் அரசியல் சாசன சட்டப்படி, ராகுல் காந்திக்கு நீதிமன்றம்தான் தண்டனை வழங்கி உள்ளது. மத்திய அரசுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என பாஜகவினர் கூறி வருகின்றனர்.
இருப்பினும் இவ்விவகாரத்தை சுட்டிக்காட்டி நேற்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தின. ஜனநாயகத்தின் கறுப்பு தினம் என்று பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.