பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கல்வி, பொதுச் சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, சாலை மேம்படுத்துதல், மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகள் தொடர்பான அறிவிப்புகளை, அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் தொடர்பான அறிவிப்பையும் விளக்கும் விதமாக உரை நிகழ்த்தினார் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன். ’மக்களைத் தேடி மேயர்’, பள்ளி மாணவர்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கான வார்டு மேம்பாடு நிதி அதிகரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு அவையில் பெரும் வரவேற்பு கிடைத்தன. பெருநகர சென்னை மாநகராட்சி, பல்வேறு துறை மூலமாக பபணிகளை மேற்கொள்ள 2023-24ஆம் நிதியாண்டில் ரூ 3560.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது
“452 கி.மீ பேருந்து சாலைகள், 78 கி.மீ உட்புறச் சாலைகள் மேம்படுத்தப்படும். மேலும் தெருக்களின் பெயர் டிஜிட்டல் முறையில் அமைக்கப்படும். மழைக் காலங்களில் நீர் தேக்கம் இருக்கும் பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணித்து மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்களைத் தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொசஸ்தலை குடிநில பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
“மாலை நேரச் சிறப்பு வகுப்புகளின் போது மாணவர்களுக்குச் சிறு தானிய உணவுகள் போன்றவை வழங்கப்படும். மாநகராட்சியின் கீழ் வரும் அனைத்து பள்ளிகளும் கட்டட மேம்பாடு மற்றும் புதிய வகுப்பறை கட்டடங்கள் அமைத்தல், பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்கள் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படும் மேலும் அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறன் மேம்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்படும், ஸ்மார்ட் வகுப்புகள் அமைத்தல், தனித்துவத்தை உணர்த்தும் விதத்தில் மாநகராட்சி பள்ளிகளுக்கென சின்னம் அறிவிக்கப்படும். மேலும் ஜேஇஇ, நீட் போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்று முக்கிய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்வி செலவை மாநகராட்சியே ஏற்கும். பள்ளி பருவத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஜேஇஇ, நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்” உள்ளிட்டவை மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்டன.
பன்னிரண்டாம் வகுப்பில் பாடப் பிரிவுகளில் 100% மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக 1000 வழங்கிவந்த நிலையி, அதை 10,000 ஆக உயர்த்தப்படுகிறது உள்ளிட்ட 27 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. பன்னாட்டுக் கலாசாரங்கள், கல்விமுறை, சுற்றுச்சூழல் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்ள ஐக்கிய நாடுகள் குழு அமைக்கப்படும். மாணவர்கள் நலன் மட்டுமின்றி 100% தேர்ச்சி ஏற்படுத்தக் கூடிய ஆசிரியர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வது, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பயில விரும்பும் ஆன்லைன் படிப்பிற்கு ஊக்கத் தொகை வழங்கப்படுமென அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும், “மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள அனைத்து மண்டலங்களில் ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்றார் மேயர் பிரியா ராஜன்
மருத்துவ முகாம்கள் நடத்திடத் தேவையான உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும், கொசு தடுப்பு பணி ஊழியர்களுக்கு வெக்டர் கண்ட்ரோல் கிட் வழங்கல், கால்நடைகளைப் பிடிப்பதற்கு வாகன கொள்முதல், மேலும் ரேபிஸ் நோய் இல்லா சென்னை மாநகரம் என்ற இலக்கு நிணையிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கும். தண்டையார்பேட்டையில் மாநகர நோய் கண்காணிப்பு பிரிவு தொடங்கப்பட்டு நோய் தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்படும். மாநகராட்சியில் குறைந்தபட்சம் ஐந்து இடங்களிலாவது நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குத் தேசிய தரவுறுதி தரச்சான்றிதழ் பெற பணிகள் மேற்கொள்ளப் படுவதாக தெரிகிறது.
ஆலந்தூர் மற்றும் ஷெனாய் நகரிலுள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் வசதி கொண்டுவரப்படும் என பொதுச் சுகாதார மேம்பாடு தொடர்பான அறிவிப்பில் வெளியாகியுள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்புகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும், பொது இட ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து அகற்றப்படும். மேலும் கூவம் மற்றும் அடையாறு ஆற்றுப்படுகையில் கட்டடக் கழிவுகள் இதர கழிவுகளைக் கொட்டப்படுவதைக் கண்காணிக்க சிசிடி கேமரா பொருத்தப்படும். மேலும் மக்கள் அதிகளவில் கூடும் பூங்கா, கடற்கரை ஆகிய இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மக்களின் குறைகளைக் கண்டறிந்து அதனைத் தீர்த்துவைக்க மக்களைத் தேடி மேயர் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநகராட்சி மக்கள் தங்கள் கோரிக்கையை 1913 என்ற எண்ணிலும் கடிதம் வாயிலாகவும் தெரிவிக்கலாம். இத்திட்டத்தின் மூலம் மாதத்திற்கு ஒருமுறை ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில் மேயரை நேரடியாகச் சந்தித்து மனு வழங்கலாம். மாமன்ற உறுப்பினரின் குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சத்திலிருந்து மூன்று லட்சமாக உயர்த்தி வழங்கப்படும், மக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட மாமன்ற உறுப்பினர்களின் வார்டு நிதி ரூ.35 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார் சென்னை மேயர்
சென்னையில் வாகன நிறுத்த நடைமுறை அமைப்பில் உள்ள சிக்கலைத் தீர்க்க போக்குவரத்து அதிகாரிகளை உள்ளடக்கிய வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து குழுமம் உருவாக்கப்படும். சென்னை போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம் தொடர்பான சிக்கலைத் தீர்க்க இக்குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மேலும் நெகிழி கழிகளிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் ஆலைமற்றும் மறுசுழற்சி செய்ய இயலாத பொருட்களை விஞ்ஞான ரீதியில் எரித்திட ஆலைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, நெகிழி பயன்பாட்டைக் குறித்து மஞ்சப்பை பயன்பாட்டை அதிகப்படுத்தப்படும். மேலும் தூய்மை தொடர்பாக கூடத்துகளுக்குள் போட்டி உருவாக்கப்பட்டு மண்டலத்தில் தூய்மையாக இருக்கும் முதன்மையான மூன்று கூடத்துகளுக்கு வெகுமதி வழங்கப்படும். மரக்கன்று நடும் பணியில் கவனம் செலுத்தப்படும், பூங்கா பராமரிப்பு, சாலையின் மையத்தடுப்புகளை பராமரித்து பசுமைப் படுத்தும் பணிகள், விளையாட்டு திடல்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இவை உள்ளிட்ட பல்வேறு கட்டுமான மற்றும் கட்டட மேம்பாடு பணிகளுக்கும் நிதி ஒதுக்கியுள்ளது சென்னை மாநகராட்சி
நிதி ஒதுக்கீடு விபரம்
பேருந்து சாலை மேம்படுத்துதல் – ரூ.881.20 கோடி ஒதுக்கீடு
மழைநீர் வடிகால் பணிகள் – ரூ.1,482.70 கோடி ஒதுக்கீடு.
திடக்கழிவு மேலாண்மை பணி – ரூ.260.52 கோடி ஒதுக்கீடு.
பாலங்கள் கட்டுமான மற்றும் மேம்படுத்தல் பணி – ரூ.102.50 கோடி ஒதுக்கீடு
பல துறைகளுக்கான கட்டடம் மேம்பாடு – ரூ.104.17 கோடி ஒதுக்கீடு.
மின்சார பணிகளுக்கு – ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
மாநகராட்சி பணிகளுக்கு இயந்திரம் வாங்குதல் – ரூ.71.29 கோடி ஒதுக்கீடு.
கல்வி மேம்பாடு – ரூ.43 கோடி
பள்ளி உபகரணங்கள் – ரூ.7.40 கோடி
சுகாதாரம் மேம்படுத்துதல் – ரூ.5.50 கோடி நிதி
குடும்ப நலம் – ரூ.70 இலட்சம் ஒதுக்கீடு.
சிறப்புத் திட்டங்கள் பணிகள் – ரூ.313.45 கோடி ஒதுக்கீடு
பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் – ரூ.77 கோடி
கழிப்பிடம் மற்றும் அத்தியாவசிய பணி – ரூ.191.64 கோடி
மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டுத் திட்டம் – ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு.
மேயர் சிறப்பு மேம்பாட்டு திட்டம் – ரூ.2 கோடி