சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவியொன்றை, வவுசராக அல்லது விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணமாக வைப்புச் செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துர்ள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்தாலோசித்ததாகவும், அதற்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் உற்பத்திச் செலவை குறைக்கும் நோக்குடன், இந்த நிதியுதவியை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி அனுராதபுரம் ஸ்ரீ மஹாபோதிக்கு முன்பாக நடைபெறவுள்ள புதிய நெல் திருவிழாவை முன்னிட்டு அம்பாந்தோட்டை மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நெல் சேகரிக்கும் நிகழ்வு கடந்த 25ஆம் திகதி லுனம விவசாய சேவை மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இம்முறை சிறு போகத்திற்கு சேற்று உரம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் யூரியா உர மூட்டையின் விலையை அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய மேலும் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும், பெரும்போகத்தில் 19,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் பண்டி உர மூட்டை ஒன்றின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.