தென்காசி: கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது சொந்த ஊர் மக்களுக்கு தாம் அளித்த வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றிய மன நிம்மதியோடு இருக்கிறார் மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் துரை வைகோ.
20 ஆண்டுகளாக யாரும் செய்ய முடியாத ஒரு நிகழ்வை 20 மாதங்களில் சலிக்காமல் அமைச்சர்களை மீண்டும் மீண்டும் நேரில் சந்தித்து தனது சொந்த ஊர் மக்களின் மனங்களை குளிர்வித்துள்ளார்.
துரை வைகோவிடம் ஒரு கோரிக்கை வைத்தால் அந்த கோரிக்கை வைத்தவர்களே மறந்தாலும் கூட அவர் மறக்காமல் அதன் மீதான பாலோ அப்களை தொடர்வார் என்பது அவரது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
இதனிடையே அ.கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் தொடக்க விழாவில் துரை வைகோ மிகவும் யதார்த்தமாக பேசிய விவரம் வருமாறு;
பிரச்சாரத்துக்கு சென்றேன்
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் சங்கரன்கோவில் தி.மு.க. வேட்பாளர் தம்பி இராஜா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க இந்த பகுதிக்கு வந்த போது, ஊர் பொது மக்கள் ஒன்று திரண்டு வைத்த கோரிக்கையில் முக்கியமான கோரிக்கை 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இயங்கி வந்த கூட்டுறவு சங்கம் மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்பதுதான். விவசாய உரங்கள் பெறுவதற்கும், வேளாண் கடன் வாங்குவதற்கும், நகைக் கடன் பெறுவதற்கும், இதர அரசின் உதவிகளைப் பெறுவதற்கும் பெரும் சிரமப்படுகிறோம். ஆதலால் கரிசல்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தை மீண்டும் இயக்கி வைக்க வேண்டும் என்று கூறினார்கள்.
எனக்கு கவலை வந்தது
அவ்வாறு மீண்டும் இயக்கப்பட்டால் கரிசல்குளம், ஆலமநாயக்கர்பட்டி. ஆலடிபட்டி, அய்யாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3500 குடும்பங்களும் அருகில் உள்ள சுற்றுவட்டார கிராம மக்களும் மிகவும் பயனடைவார்கள் என்று என்னிடம் கூறினர்கள். அவர்களின் வேதனையை உணர்ந்து கொண்டு, கோரிக்கையின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு, நான் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறேன் என வாக்குறுதி அளித்தேன். சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற கவலையும் எனக்கு வந்தது.
சென்னையிலிருந்து திண்டுக்கல்
அன்றைய கூட்டுறவுத் துறை அமைச்சர் அண்ணன் ஐ. பெரியசாமி அவர்களை திண்டுக்கல் சென்று சந்தித்து இக் கோரிக்கையை வலியுறுத்தினேன். அமைச்சர் அவர்கள், ‘இதற்காகவா சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு நான் அமைச்சர் அவர்களிடம் கூறினேன், கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் இயக்கங்களும் பலரும் இச்சங்கத்தை மீண்டும் தொடங்கிட பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் இச்சங்கத்தை மீண்டும் இயக்க இயலவில்லை என்று பலரும் கூறுகிறார்கள்.
நிம்மதியாக இருக்கக் கூறிய ஐ.பெரியசாமி
ஒரு கிராமத்தில் சில குறைபாடுகளால் கலைக்கப்பட்ட ஒரு கூட்டுறவு சங்கம் மீண்டும் அதே கிராமத்தில் இயக்கப்பட்டது தமிழ்நாடு வரலாற்றில் இல்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால் நான் மக்களிடம், மீண்டும் சங்கம் இயக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டேன். மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலுமா என்ற கவலையில் நான் இங்கு வந்துள்ளேன் என்று கூறினேன். அமைச்சர் அவர்கள், அருகில் இருந்த அதிகாரிகளிடம் விவாதித்து விட்டு,கூட்டுறவு சங்கம் மீண்டும் இயக்கப்படுவது சிரமம்தான். ஆனாலும் நிறைவேற்றுவோம். மீண்டும் கரிசல்குளம் சங்கம் இயக்கப்படும். நீங்கள் மன நிம்மதியுடன் செல்லுங்கள் என்று கூற, மன மகிழ்ச்சியுடன் சென்னை திரும்பினேன்.
ஏழு, எட்டு முறை வைகோ பேசினார்
அதன் பின்னர் பல முறை அமைச்சரிடம் நினைவு கூர்ந்தேன். தலைவர் வைகோ அவர்கள், அமைச்சர் அவர்களை அலைபேசி மூலம் ஏழு எட்டு முறைக்கு மேல் அழைத்து நினைவுகூர வைத்தேன். இதனால் என்னவாயிற்று என்றால் எங்களுடைய ம.தி.மு.க.திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் என். செல்வராகவன் அவர்கள், வேறு காரணங்களுக்காக அமைச்சர் அவர்களை சந்திக்கச் சென்றாலும், ‘என்ன கரிசல்குளம் கூட்டுறவுச் சங்கம் விசயமா? அண்ணன் வைகோ அவர்களிடமும், தம்பி துரை வைகோ அவர்களிடமும் சொல்லுங்கள், கரிசல் குளம் கூட்டுறவு சங்க வேலை நடந்து கொண்டிருக்கிறது’ என்று சொல்லுமளவுக்கு கரிசல் குளம் ஊரின் பெயர் அமைச்சர் அவர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்டது.
அமைச்சரவையில் மாற்றம்
இதற்கிடையில் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டது. அண்ணன் பெரியகருப்பன் புதிய கூட்டுறவுத் துறை அமைச்சரானார். எனக்குள் கவலை. கூட்டுறவு சங்கம் திறப்பதில் மறுபடியும் கால தாமதம் ஆகிவிடுமோ? வேறு ஏதாவது தடங்கல் ஏற்படுமோ? என்று. அதனால் அமைச்சர் அண்ணன் பெரியகருப்பன் அவர்களைச் சந்தித்து கரிசல்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க விவரங்களை எடுத்துக் கூறினேன். கூட்டுறவுச் சங்கக் கோப்புகளைப் பார்த்த அமைச்சர் அவர்கள், ‘கூட்டுறவு சங்கம் தொடங்குவதற்கான அனைத்து நடைமுறைகளையும் சட்டபூர்வமாக நிறைவேற்றிவிட்டார்கள். ஆகவே கூட்டுறவு சங்கம் விரைவில் திறக்கப்படும். கவலை வேண்டாம்’ என்று கூறினார்கள்.
நீங்கள் தான் திறந்து வைக்க வேண்டும்
மனமகிழ்ச்சியோடு நான், அமைச்சர் அவர்களிடம், ‘அப்படியென்றால் நீங்கள் தான் திறந்து வைக்க வேண்டும்’ என்று அன்பு வேண்டுகோள் விடுத்தேன். தலைவர் வைகோ அவர்களும் அலைபேசி மூலம் அமைச்சருக்கு அழைப்பு விடுக்க, அமைச்சர் அவர்கள், ‘உங்கள் விருப்பப்படி, நானே தொடங்கி வைக்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்த பிறகு ஒரு நாளில் வைத்துக் கொள்ளலாம்’ என்று கூறினார்கள்.
இன்று அமைச்சர் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மார்ச் 26, 2023 இல் மீண்டும் இயக்கப்படுகிறது.
இடைவிடாத தொடர் முயற்சி
சுமார் 20 மாத கால இடைவிடாத தொடர் முயற்சி காரணமாக நான்கு கிராம மக்களிடம் உறுதி அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி தந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்படுகிறது. எனது குறுகிய கால அரசியல் பொதுவாழ்வுப் பயணத்தில் மக்களிடம் தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமையோடு இன்று உங்கள் முன்னால் நிற்பதை ஒரு சாதனையாகவே உணர்கின்றேன்.
மாரியம்மாள் மூச்சுக்காற்று
எனது பாட்டி மாரியம்மாள் மூச்சுக்காற்று உலவுகிற மண் இந்த மண். இந்த மண்ணின் பெருமையைக் காக்கவும் உங்கள் நலனைப் பாதுகாக்கவும் என்றென்றும் துணையாக இருப்பேன் என உறுதி கூறி என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்.