திருமலை: திருப்பதி தேவஸ்தானம் திருமலையில் காற்றில் மாசு கலப்பதை தடுக்கும் விதத்தில் தமது அதிகாரிகளுக்கு எலக்ட்ரிக் கார்களை வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று ஹைதராபாத் மேகா இன்ஜினீயரிங் நிறுவனம் ஒரு எலக்ட்ரிக் பஸ் ரூ.1.8 கோடி வீதம் ரூ.18 கோடி செலவில் மொத்தம் 10 எலக்ட்ரிக் சொகுசு பஸ்களை வழங்கியது.
அவற்றை திருமலை கோயில் முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் அவற்றுக்கான சாவிகளை மேகா இன்ஜினீயரிங் நிறுவனத்தார் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஒய்.வி. சுப்பாரெட்டி கூறியதாவது: திருமலையில் காற்றில் மாசு படிவதை தவிர்க்க பிளாஸ்டிக்கை தடை செய்தோம். இதனை தொடர்ந்து லட்டு பிரசாதங்களை வழங்கும் பிளாஸ்டிக் பைகளை கூட சணல் பைகளாக மாற்றினோம். முதற்கட்டமாக 35 பேட்டரி கார்களை தேவஸ்தான அதிகாரிகளுக்கு வழங்கினோம்.
விரைவில் திருமலையில் உள்ள வாடகை கார்கள் கூட எலக்ட்ரிக் கார்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுப்பாரெட்டி கூறினார்.
காணிக்கையாக கொடுக்கப் பட்ட எலக்ட்ரிக் பஸ்கள் அனைத்தும் திருமலையில் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு பயன்படுத்த தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி மற்றும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதன்பின்னர் சுப்பாரெட்டி கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூலை 15-ம்தேதி வரை 3 மாதங்களுக்கு கோடையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கரோனா பரவலுக்கு முன்பு வரை அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு மலைப் பாதைகள் வழியாக திருமலைக்கு நடந்து வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இனி ஏப்ரல் 1-ம் தேதி முதல் அலிபிரி மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு தினமும் 10 ஆயிரம் வீதமும், ஸ்ரீவாரி மெட்டு வழியாக வரும் பக்தர்களுக்கு தினமும் 5 ஆயிரம் வீதமும் திவ்ய தரிசன டோக்கன்கள் இலவசமாக வழங்கப்படும். தயவு செய்து விஐபி சிபாரிசு கடிதங்கள் வழங்குவோர் அதனை இந்த 3 மாதங்களுக்கு குறைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு சுப்பாரெட்டி கூறினார்.