புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே, கன்னியான்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (49). இவருக்கு அஞ்சலை (44) என்ற மனைவியும், அனிதா (22) என்ற மகளும், இன்பராஜ்(8) என்ற மகனும் இருக்கின்றனர்.
சண்முகராஜ் கடந்த 10 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள ஷிகாத் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்திருக்கிறார். கடந்தாண்டு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் சவுதி அரேபியாவிற்குப் பணிக்காகச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி காலை தங்கும் அறை, கழிவறையில் சண்முகராஜ் தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டதாக அவருடைய நண்பர்கள் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த, சண்முகராஜின் மனைவி அஞ்சலை, மகள், மகன் உறவினர்கள் ஆகியோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சண்முகராஜின் மனைவி உட்பட உறவினர்கள், “வெளிநாட்டில் இறந்துபோன, சண்முகராஜ் உடலை மீட்டு தர வேண்டும், அவரின் சாவில் மர்மம் இருக்கிறது. அதற்குரிய விசாரணை நடத்த வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு கொடுத்தனர்.
இறந்த கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி குழந்தைகளுடன், அஞ்சலை அழுது புலம்பியது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அப்போது பேசிய அஞ்சலை, “26-ம் தேதி காலையில கூட எங்ககிட்ட நல்லா தான் பேசினாரு. இன்னும் சில மாசத்துல ஊருக்கு வர்றதாக சொன்னாரு. இங்க இருந்து அவருக்கு எந்த வித பிரச்னையும் இல்லை. தற்கொலை முடிவு எடுக்கிற ஆளும் அவர் கிடையாது. எனக்கும், என் பிள்ளைகளுக்கு எல்லாமே அவர் தான். அவர் இல்லாம, எப்படி என் பிள்ளைகளை வளர்க்கப்போறேனோ, தெரியலை. உரிய நீதி விசாரணை நடத்தணும்”என்றார்.